வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்த குரங்குகள் கூண்டு வைத்து பிடிப்பு

கபிஸ்தலம் அருகே கொள்ளிடம் ஆற்றங்கரை பகுதியில் வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்த குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து, வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.;

Update:2023-03-05 00:52 IST

கபிஸ்தலம் அருகே கொள்ளிடம் ஆற்றங்கரை பகுதியில் வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்த குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து, வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

குரங்குகள் அட்டகாசம்

கபிஸ்தலம் அருகே உள்ள திருவைக்காவூர் ஊராட்சியில் கொள்ளிட ஆற்றின் கரையோரம் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இங்கு உள்ள வீடுகளுக்குள் குரங்குகள் புகுந்து அட்டகாசம் செய்து வந்தன. இவ்வாறு வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்த குரங்குகளை வனத்துறையினர் பிடித்து செல்லவேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.

இதுதொடர்பாக பொதுமக்கள் தஞ்சை மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பினர். இதனையடுத்து தஞ்சை மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி, வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தும் குரங்குகளை பிடிக்கும்படி உத்தரவிட்டார்.

வனத்துறையினர் நடவடிக்கை

அதன்பேரில் தஞ்சை வனச்சரக அலுவலர் ரஞ்சித் அறிவுறுத்தலின் படி, பாபநாசம் வனவர் ரவி, வனக்காப்பாளர் சண்முகவேல் உள்ளிட்டோர் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது திருவைக்காவூர் ஒன்றிய கவுன்சிலர் விஜயன் மற்றும் ஊர் பொதுமக்கள் உதவியுடன் 26-க்கும் மேற்பட்ட குரங்குகளை கூண்டு வைத்து பிடித்தனர்.

பின்னர் வனத்துறையினர் அனைத்து குரங்குகளையும் புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தமலையில் உள்ள அடர்ந்த வன பகுதியில் கொண்டு சென்று விட்டனர். குரங்குகள் பிடிபட்டதால் இப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்