வளர்ச்சி பணிகளை கண்காணிக்க வேண்டும்
வளர்ச்சி பணிகளை கண்காணிக்க வேண்டும்;
உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் வளர்்ச்சி பணிகளை கண்காணிக்க வேண்டும் என்று திருத்துறைப்பூண்டி நகராட்சி தலைவர் கவிதாபாண்டியன் தெரிவித்தார்..
நகராட்சி கூட்டம்
திருத்துறைப்பூண்டி நகர் மன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் கவிதா பாண்டியன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஜெயபிரகாஷ், ஆணையர் பிரதான் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் உறுப்பினர்கள் கலந்துகொண்டு பேசினர். இதன் விவரம் வருமாறு:-
உஷாசண்முகசுந்தரம் (அ.தி.மு.க.): எனது 22 வார்டில் எந்த ஒரு பணியும் இதுவரை நடைபெறவில்லை. குடிநீர், சாலைகள் பிரச்சினை அதிகமாக உள்ளது.
இதனை சீரமைக்க வேண்டும்.
எமல்டாமேரி (தி.மு.க.): 8-வது வார்டில் பூங்கா அமைக்க வேண்டும் என்று சென்ற கூட்டத்திலேயே பேசியிருந்தேன். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனது வார்டு மக்கள் சுடுகாட்டிற்கு செல்வதற்கான வழியில் உள்ள முள்ளியாற்று பாலம் பழுதடைந்துள்ளது. எனவே புதிய பாலம் கட்ட வேண்டும்.
லட்சுமி (இ.கம்யூ): 21-வது வார்டு வடக்குதெருவில் சாலைகள் பழுதடைந்துள்ளது. மேலத்தெருவில் 2 மின்கம்பங்கள் அமைக்க வேண்டும்.
நிபந்தனைகளை தளர்த்தி
ராஜேஸ்வரி (தி.மு.க.): எங்கள் வார்டில் சாலை அமைத்து கொடுத்ததற்கு நன்றி. எழிலரசன் (காங்): பஸ் நிலைய கட்டணம் வசூல் உரிமம் மற்றும் காய்கறி அங்காடி வசூல் உரிமம் ஆகியவற்றிக்கு டெபாசிட் தொகை அதிகமாக உள்ளதால் ஏலம் எடுக்க யாரும் முன் வரவில்லை. எனவே நிபந்தனைகளை தளர்த்தி டெபாசிட் தொகையை குறைத்து ஏலம் விட வேண்டும்.
துணைத்தலைவர்: கூட்டுக்குடிநீர் திட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும். மாரியம்மன்குளம், புளியங்குளம் ஆகிய இடங்களில் பூங்கா அமைக்க வேண்டும். சிங்களாந்தி பைபாஸ் சாலையில் சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும்.
தலைவர்: திருத்துறைப்பூண்டி நகர மேம்பாட்டிற்காக உழைக்க நான் 24 மணி நேரமும் தயாராக இருக்கிறேன். நமது நகராட்சி வரி வசூலில் மாநில அளவில் 5-ம் இடம் பெற்றிருக்கிறது. இதற்காக பாடுபட்ட அதிகாரிகளுக்கு நன்றி.
கண்காணிக்க வேண்டும்
நகராட்சி பணிகள் செம்மையாக நடைபெற வேண்டுமானால் உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை கண்காணிக்க வேண்டும். நமது நகரத்தில் மக்கும் குப்பை, மக்கா குப்பைகளை பிரிப்பதில் பொதுமக்களோடு இணைந்து மன்ற உறுப்பினர்கள் செயல்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் நகரத்தின் தூய்மைப்பணி திட்டம் வெற்றியடையும். 21-வது வார்டு அண்ணாநகர் ஆதிதிராவிடர் பகுதிக்கு தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து எம்.எல்.ஏ. ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இதற்காக நகர்மன்றத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு திட்டங்கள் தயார் செய்து மதிப்பீடுக்காக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு செய்தவுடன் அனைத்து பணிகளையும் செய்து முடிக்கப்படும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.