விவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு

பேரிகை அருகே விவசாயி வீட்டில் 8 பவுன் நகை, ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.;

Update:2023-03-04 00:15 IST

ஓசூர்

பேரிகை அருகே விவசாயி வீட்டில் 8 பவுன் நகை, ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விவசாயி

கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே உள்ள முதுகுறுக்கி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரா (வயது 50). விவசாயி. இவரும், குடும்பத்தினரும் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு ஊரில் நடந்த எருது விடும் விழாவை காண சென்றனர்.

இந்த நிலையில் அதேபகுதியை சேர்ந்த லட்சுமணன் என்பவர் ராமச்சந்திரா வீட்டு பக்கமாக சென்றார். அப்போது வீட்டின் முன்புற கதவு திறந்து இருப்பதை கண்டார். இது குறித்து அவர், ராமச்சந்திரனுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து ராமச்சந்திரன் வீட்டுக்கு வந்து பார்த்தார்.

நகை, பணம் திருட்டு

அப்போது வீட்டில் பீரோவில் வைத்திருந்த 8 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது. ராமச்சந்திரா குடும்பத்துடன் வெளியே சென்றதை நோட்டமிட்டு மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த நகை, பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து ராமச்சந்திரா பேரிகை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பேரிகை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மர்ம நபர்களின் கைரேகையை பதிவு செய்து கொண்டனர். இது தொடர்பாக பேரிகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்