பெண்ணிடம் ஏமாற்றிய ரூ.20 ஆயிரம் மீட்பு

பெண்ணிடம் ஏமாற்றிய ரூ.20 ஆயிரம் மீட்பு மீட்கப்பட்டது.

Update: 2022-12-21 18:45 GMT

மண்டபம் மறவர் தெருவை சேர்ந்த பிரபு என்பவரின் மனைவி தில்லைரேவதி (வயது 30). இவரின் செல்போன் எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் பே.டி.எம். வாடிக்கையாளர் சேவை மைய அனுமதி வழங்குவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை பார்த்த தில்லைரேவதி அந்த அனுமதியை பெற்று வருமானம் ஈட்டலாம் என நினைத்து குறுஞ்செய்தியில் வந்த எண்ணில் தொடர்பு கொண்டார். அதில் பேசியவர்கள் வாடிக்கையாளர் சேவை மைய அனுமதி வழங்குவதாகவும், அதற்கு தங்கள் நிறுவன பணவைப்பு பெட்டகத்திற்கு உங்களின் கணக்கில் பணம் இருப்பு இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் கேட்ட விவரங்களை கொடுத்த தில்லைரேவதி தனது பே.டி.எம். செயலியில் உள்ள பண வைப்பு பெட்டகத்தில் பணத்தினை செலுத்தி உள்ளார். பின்னர் அவரின் கணக்கில் இருந்த ரூ.19 ஆயிரத்து 999-ஐ மோசடி நபர்கள் எடுத்துவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் 1930-என்ற சைபர்கிரைம் எண்ணில் புகார் செய்தார். அதன்பேரில் ராமநாதபுரம் சைபர்கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் ஆகியோர் துரித நடவடிக்கை எடுத்து, மோசடி நபர்களின் வங்கி கணக்கிற்கு பணம் செல்லாமல் தடுத்து நிறுத்தினர். மேலும், அந்த பணத்தினை தில்லை ரேவதியின் வங்கி கணக்கிற்கே திரும்ப கிடைக்க செய்தனர். இதனை தொடர்ந்து ரூ.19 ஆயிரத்து 999-ஐ திரும்ப வழங்கப்பட்டதற்கான ஆவணத்தை போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தில்லை ரேவதியிடம் வழங்கினார். பொதுமக்கள் இதுபோன்ற மோசடி நபர்களிடம் நம்பி ஏமாறாமல் இருக்க வேண்டும் என்றும், கவனக்குறைவாக பணம் எடுக்கப்பட்டால் உடனடியாக 1930 எண்ணில் தெரிவித்தால் பணம் மோசடி நபர்களின் வங்கி கணக்கிற்கு செல்லாமல் தடுக்க முடியும் என்றும் கேட்டுக்கொண்டார். 

Tags:    

மேலும் செய்திகள்