அம்மன் கோவிலில் பணம், மின்சாதனங்கள் கொள்ளை

தக்கலை அருகே அம்மன் கோவிலில் 6-வது முறையாக பணம் மற்றும் மின்சாதனங்களை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2023-08-03 18:45 GMT

தக்கலை:

தக்கலை அருகே அம்மன் கோவிலில் 6-வது முறையாக பணம் மற்றும் மின்சாதனங்களை கொள்ைளயடித்து ெசன்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

அம்மன் கோவில்

தக்கலை அருகே உள்ள கல்லுவிளையில் பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. இங்கு தினமும் பூஜைகள் நடைபெறும். மேலும் ஆண்டுக்கு ஒரு முறை ஆடி மாத பொங்கல் விழா கொண்டாடப்படும். இந்த ஆண்டு பொங்கல் விழா வருகிற 6-ந் தேதி தொடங்க உள்ளது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் மேல்சாந்தி கமுகறை சதீஸ் பூஜைகள் செய்ய கோவிலுக்கு வந்தார். அப்போது கோவில் உள்புறத்தில் உள்ள அறை கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அங்கு இருந்த ஒலிப்பெருக்கி ஆம்பிளிபிளேயர், சி.டி.பிளேயர், பென்டிரைவ் போன்ற மின்சாதனங்களையும், மேஜை டிராயரையும் காணவில்லை. அந்த டிராயரில் சிறிதளவு பணம், சில்லரை காசுகள் இருந்துள்ளது.

கண்காணிப்பு கேமரா காட்சி

தொடர்ந்து அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தார். அப்போது சம்பவத்தன்று அதிகாலையில் 2 மர்ம நபர்கள் கோவில் வளாகத்திற்குள் வந்து அங்குமிங்குமாக நோட்டமிடுகிறார்கள். பின்னர் அவர்கள் கொண்டு வந்த சாவிகள் மூலம் இரும்பு காணிக்கை பெட்டியை திறக்க முயற்சிக்கிறார்கள். அது முடியாமல் போகவே அருகில் இருந்த அறை கதவை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த மின்சாதன பொருட்களையும், மேஜையில் இருந்த பணம், சில்லரை காசுகளையும் கொள்ளையடித்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

கோவிலில் அம்மன் சிலை இருக்கும் கருவறை கதவை திறக்க முயற்சிக்கவில்லை. அந்த கதவின் பூட்டு ரகசிய எண்களால் பூட்டப்பட்டிருந்தது. மேலும் யாராவது சாவி மூலம் திறக்க முயன்றால் அலாரம் எழுப்பும். இதை தெரிந்த நபர்கள்தான் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என கருதப்படுகிறது.

6-வது முறையாக...

இந்த கோவிலில் ஏற்கனவே 5 முறை கொள்ளை மற்றும் கொள்ளை முயற்சி சம்பவம் நடந்துள்ளது. அதன்பின்பு கோவில் வளாகத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. தற்போது 6-வது முறையாக மீண்டும் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்து தக்கலை போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு இருந்த ரேகைகள் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையில் மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். அம்மன் கோவிலில் 6-வது முறையாக கொள்ளை நடந்திருப்பது பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்