நீர்பிடிப்பு பகுதிகளில் மிதமான மழை; அணைகள் நீர்மட்டம் மேலும் உயர்வு
நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மிதமான மழை காரணமாக தென்காசி மாவட்ட அணைகள் நீர்மட்டம் மேலும் உயர்ந்து உள்ளது.;
நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மிதமான மழை காரணமாக தென்காசி மாவட்ட அணைகள் நீர்மட்டம் மேலும் உயர்ந்து உள்ளது.
மிதமான மழை
நெல்லை, தென்காசி மாவட்டத்தில் தென் மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. நேற்று மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அடிவார பகுதியில் மிதமான மழை பெய்தது. நெல்லையில் வெயில் அடித்தது.
மலைப்பகுதியில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நீர்மட்டமும் மேலும் உயர்ந்து வருகிறது.
நீர்மட்டம் உயர்வு
தென்காசி மாவட்டத்தில் உள்ள குண்டாறு அணை 3-வது நாளாக நேற்றும் நிரம்பி வழிந்தது. அணைக்கு வருகிற 67 கன அடி தண்ணீர் அப்படியே உபரி நீராக மறுகால் பாய்ந்து செல்கிறது.
கடனாநதி அணை நீர்மட்டம் மேலும் 5 அடி உயர்ந்து 54 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 219 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ராமநதி அணை நீர்மட்டம் மேலும் 4 அடி உயர்ந்து 58 அடியாக உயர்ந்துள்ளது. இந்த அணைக்கு 98 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கருப்பாநதி அணை நீர்மட்டம் 34.12 அடியாக உள்ளது. அடவிநயினார் அணை பகுதியில் பலத்த மழை பெய்திருப்பதால் அணைக்கு நீர்வரத்து 104 கன அடியாக உள்ளது. இதனால் நீர்மட்டம் மேலும் 6 அடி உயர்ந்து 77 அடியாக உள்ளது.
மழை அளவு
தென்காசி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
செங்கோட்டை - 5
தென்காசி - 4
கடனாநதி -10
ராமநதி -7
கருப்பாநதி -2
குண்டாறு -19
அடவிநயினார்- 40.