சாலையோர வியாபாரிகளுக்கு நடமாடும் விற்பனை வண்டிகள்

பட்டுக்கோட்டையில் சாலையோர வியாபாரிகளுக்கு நடமாடும் விற்பனை வண்டிகளை கலெக்டர் தீபக் ஜேக்கப் வழங்கினார்.

Update: 2023-09-08 20:32 GMT

பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டையில் சாலையோர வியாபாரிகளுக்கு நடமாடும் விற்பனை வண்டிகளை கலெக்டர் தீபக் ஜேக்கப் வழங்கினார்.

நடமாடும் விற்பனை வண்டிகள்

பட்டுக்கோட்டை நகராட்சி வளாகத்தில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்க திட்டம் 2022-2023-ன் கீழ் முதற்கட்டமாக சாலையோர வியாபாரிகளுக்கு நடமாடும் விற்பனை வண்டிகள் வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவுக்கு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கி முதற்கட்டமாக 6 மாற்றுத்திறனாளிகளுக்கும், 5 விதவைகளுக்கும் ரூ.10 லட்சம் மதிப்பிலான நடமாடும் விற்பனை வண்டிகளை வழங்கினார்.

பனை விதைகள் சேகரிப்பு வங்கி

மேலும் சாலையோர வியாபாரிகள் 47 பேருக்கு வங்கிகள் மூலம் மின்னணு பரிவர்த்தனை அட்டையும், திடக்கழிவு மேலாண்மை பணிக்காக ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் 5 குப்பை அள்ளும் பேட்டரி ஆட்டோக்களையும் நகராட்சிக்கு வழங்கினார்.

தொடர்ந்து முதல் அமைச்சரின் 1 கோடி பனை விதைகள் சேகரிப்பு திட்டத்தின் கீழ் பனை விதைகள் சேகரிப்பு வங்கியையும் கலெக்டர் தொடங்கி வைத்தார்.

முன்னதாக நகராட்சி ஆணையர் குமரன் வரவேற்றார். நகர்மன்ற தலைவர் சண்முகப்பிரியா செந்தில்குமார், உதவி கலெக்டர் அக்பர் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தி.மு.க. செயலாளர் செந்தில்குமார், தாசில்தார் ராமச்சந்திரன், சுகாதார அலுவலர் நெடுமாறன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நகராட்சி பொறியாளர் குமார் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்