டாஸ்மாக் கடையை மூடக்கோரி ஊழியர்கள் காலில் விழுந்து கெஞ்சிய எம்.எல்.ஏ.
சேலம் அருகே அரசு டாஸ்மாக் மதுபானக்கடையை மூடக்கோரி, கடை ஊழியர்கள் காலில் விழுந்து கெஞ்சிய பா.ம.க. எம்.எல்.ஏ.வின் நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது.;
சேலம் அருகே அரசு டாஸ்மாக் மதுபானக்கடையை மூடக்கோரி, கடை ஊழியர்கள் காலில் விழுந்து கெஞ்சிய பா.ம.க. எம்.எல்.ஏ.வின் நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது.
முற்றுகை போராட்டம்
சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முத்துநாயக்கன்பட்டி ஊராட்சியில் உள்ள டாஸ்மாக் கடை பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக அந்த பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் அந்த மதுபானக்கடையை மூடக்கோரி கடந்த மாதம் 7-ந் தேதி முற்றுகை போராட்டம் சேலம் மேற்கு தொகுதி பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் தலைமையில் நடைபெற்றது.
அப்போது ஒரு மாதத்திற்குள் டாஸ்மாக் கடையை மூடுவதாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. ஆனால் நேற்றுடன் ஒரு மாதம் ஆகியும் இதுவரை டாஸ்மாக் கடை அகற்றப்படவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் நேற்று ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க முத்துநாயக்கன்பட்டிக்கு வந்த அருள் எம்.எல்.ஏ.விடம் டாஸ்மாக் கடையை இழுத்து மூடி பூட்டு போடுவது தொடர்பாக முறையிட்டனர்.
உடனே தன்னிடம் முறையிட்ட பெண்களுடன் அருள் எம்.எல்.ஏ. அங்குள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றார். அப்போது அவர், டாஸ்மாக் கடை முன்பு நின்று கொண்டு காலக்கெடு நிறைவு பெறுவதால் தயவுசெய்து நாளை (இன்று) கடையை மூடிவிடுங்கள் என்று கடை ஊழியர்களிடம் கையெடுத்து கும்பிட்டார்.
தரையில் விழுந்து கும்பிட்டு கெஞ்சினார்
பின்னர் யாரும் எதிர்பாராத நிலையில், கடையில் இருந்த விற்பனையாளர் மற்றும் ஊழியர்களை பார்த்து உங்கள் காலில் விழுந்து கேட்கிறேன் எனக்கூறிய அருள் எம்.எல்.ஏ. தரையில் விழுந்து கும்பிட்டு கடையை மூடும்படி கெஞ்சினார்.
எம்.எல்.ஏ.வின் இந்த திடீர் நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்த அவருடன் வந்த ெபண்கள் அவரை தூக்கி விட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
இதையடுத்து அருள் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
சட்ட போராட்டம்
அப்போது அவர் கூறியதாவது:-
சேலம் மேற்கு தொகுதியில் முத்துநாயக்கன்பட்டி சாமி சிலைகள் செய்வதற்கு பிரசித்தி பெற்ற இடம். இந்த இடத்தில் உள்ள டாஸ்மாக் கடையை மூடுவதற்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு போராட்டம் செய்த போது ஒரு மாத காலத்தில் அகற்றி கொள்வதாக எழுத்துப்பூர்வமாக அதிகாரிகள் எழுதி கொடுத்திருந்தனர். ஆனால் இதுவரை அகற்ற எந்த ஏற்பாடும் செய்யவில்லை.
இதனால் அந்த பகுதி பெண்களை வைத்து டாஸ்மாக் விற்பனையாளர் காலில் விழுந்து நாளையில் இருந்து கடையை திறக்க கூடாது என வேண்டுகோள் விடுத்தேன். கடையை வேறு இடத்தில் ஒதுக்குப்புறமாக வைத்து கொள்ளுங்கள் என கூறினோம். இந்த டாஸ்மாக் கடையை மூடும் வரை போராட்டத்தை தொடருவோம். தேவைப்பட்டால் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்து சட்டப்போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று பொதுமக்களிடம் உறுதி அளித்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பா.ம.க. எம்.எல்.ஏ.வுடன், ஊராட்சி மன்ற தலைவர்கள் முத்துநாயக்கன்பட்டி சாரதா ராஜா, செல்லப்பிள்ளை குட்டை வெங்கடாஜலம், பா.ம.க. ஒன்றிய செயலாளர் காமராஜ், ஒன்றிய தலைவர் சம்பத், முத்துநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சக்தி மற்றும் பல்வேறு சங்கத்தினர், அந்த பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் உடன் சென்று இருந்தனர். பின்னர் அவர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.