மாணவன்-தங்கைக்கு, செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. ஆறுதல்

அரிவாள் வெட்டில் காயம் அடைந்த மாணவன்-தங்கைக்கு, செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. ஆறுதல் கூறினார்.;

Update: 2023-08-14 19:28 GMT

நாங்குநேரியில் அரிவாள் வெட்டில் காயம் அடைந்த பிளஸ்-2 மாணவர் சின்னத்துரை, அவரது தங்கை சந்திராசெல்வி ஆகியோர் பாளையங்கோட்டை அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற குழு தலைவர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. நேற்று பாளையங்கோட்டை அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரிக்கு சென்று, மாணவர் சின்னத்துரை, சந்திராசெல்வி மற்றும் அவர்களுடைய தாயாரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. கூறியதாவது:-

மாணவர் சின்னத்துரை, தங்கை சந்திராசெல்வி ஆகியோர் மீது கொடூரமான கொலை முயற்சி தாக்குதல் நடந்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடைபெறாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். காவல்துறை, உளவுத்துறை இடையே ஒருங்கிணைப்பு இல்லை. இதுபோன்ற விஷயங்களை உளவுத்துறையினர் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

பள்ளிக்கூடங்களில் விளிம்புநிலை சமூக மாணவர்கள் கண்ணியத்தோடும், சுதந்திரமாகவும் செயல்பட முடியாதபோது அதை தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் கண்காணித்து தடுத்திருக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது, முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன், ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., காங்கிரஸ் வக்கீல் அணி மாநில இணை செயலாளர் மகேந்திரன், நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன், மாவட்ட பொருளாளர் ராஜேஷ் முருகன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்