தமிழகத்திலேயே முதலாவதாக மியாட் ஆஸ்பத்திரியில் முழு உடலையும் ஸ்கேன் செய்யும் அதிநவீன நடமாடும் எந்திரம்
தமிழகத்திலேயே முதலாவதாக மியாட் ஆஸ்பத்திரியில் முழு உடலையும் ஸ்கேன் செய்யும் அதிநவீன நடமாடும் எந்திரத்தை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.;
அதிநவீன சி.டி. ஸ்கேன் எந்திரம்
சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் ஆஸ்பத்திரியில் தமிழகத்திலேயே முதலாவதாக அதிநவீன வசதிகளை உள்ளடக்கிய 'நிகழ் நேர இன்ட்ரா ஆபரேட்டிவ் முழு உடலுக்கான மொபைல் 32 ஸ்லைஸ்' என்ற நடமாடும் சி.டி. ஸ்கேன் எந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வும், தி.மு.க. இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். அப்போது மியாட் ஆஸ்பத்திரியின் நிர்வாக இயக்குனர் பிரித்வி மோகன்தாஸ் உள்பட முக்கிய பிரமுகர்கள் உடன் இருந்தனர்.
நடமாடும் முழு உடல் சி.டி. ஸ்கேன் எந்திரம், அறுவை சிகிச்சையை வேகமாகவும், துல்லியமாகவும், 8 மடங்கு பாதுகாப்பானதாகவும் ஆக்குகிறது. மேலும் அறுவை சிகிச்சையில் சர்வதேச தரத்தை வழங்க உதவுகிறது. அதிக துல்லியம் என்பது வெற்றிக்கான அதிக வாய்ப்புகளையும், மேம்படுத்தப்பட்ட முடிவுகளையும் மற்றும் விரைவாக ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்புவதையும் சாத்தியமாக்குகிறது.
முற்றிலும் பாதுகாப்பானது
இந்த எந்திரம், வழக்கமான சி.டி. ஸ்கேன் எந்திரங்களை விடவும் 3 மடங்கு குறைவான கதிர்வீச்சை வெளியிடுகிறது. ஆனால் படத்தின் தரத்தில் எத்தகைய சமரசத்தையும் மேற்கொள்வதில்லை. குறைவான ஸ்கேன் மட்டுமே தேவைப்படுவதால், இது நோயாளிகள் மற்றும் டாக்டர்கள் 2 பேருக்கும் பாதுகாப்பானதாக திகழ்கிறது. இந்த எந்திரத்தின் மூலம் மியாட்டின் விபத்து அறுவை சிகிச்சை இன்னும் பாதுகாப்பானதாகவும், வேகமானதாகவும், மேம்படுத்தப்பட்ட சிகிச்சைகளை வழங்குவதாகவும் மாறியுள்ளது.
அறுவை சிகிச்சையின் வெவ்வேறு கட்டங்களில் நரம்புகள், ரத்த நாளங்கள் மற்றும் மூளை திசுக்களின் உயர் தெளிவுத்திறன் படங்களை அறுவை சிகிச்சை நிபுணர்கள் நிகழ் நேரத்திலேயே பார்க்கலாம். இதனால் அறுவை சிகிச்சை அறையிலேயே கிட்டத்தட்ட பூஜ்ஜியம் பிழை முடிவுகளுக்கு உதவுகிறது. இதனால் சிறந்த அறுவை சிகிச்சை முடிவுகள் மற்றும் குறைவான இடர் சாத்தியங்கள் வசப்படும். நடமாடும் முழு உடல் சி.டி.ஸ்கேன் குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சைக்கு கூட முற்றிலும் பாதுகாப்பானது.
மேற்கண்ட தகவல் மியாட் ஆஸ்பத்திரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.