"தி.மு.க. ஆட்சியில் தமிழ் எழுத்தாளர்களுக்கு முக்கியத்துவம்"- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு

“தி.மு.க. ஆட்சியில் தமிழ் எழுத்தாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது” என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாெமாழி கூறினார்;

Update:2022-11-27 01:48 IST

"தி.மு.க. ஆட்சியில் தமிழ் எழுத்தாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது" என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாெமாழி கூறினார்.

இலக்கிய திருவிழா

தமிழின் இலக்கிய செழுமையை உலகறிய செய்யும் வகையில் நெல்லையில் 'பொருநை இலக்கிய திருவிழா' தமிழக அரசு சார்பில் நேற்று நடந்தது. இதற்கான தொடக்க விழா பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கத்தில் நடைபெற்றது. கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கினார். பொது நூலக இயக்குனர் இளம்பகவத், மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, உதவி கலெக்டர் (பயிற்சி) கோகுல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் ெபாய்யாமொழி, ராஜகண்ணப்பன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

நதி நாகரிகம்

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாெமாழி பேசியதாவது:-

நதி நாகரிகம் தோன்றிய பொருநை நதியின் அன்னை மடியில் இருந்து இந்த விழா தொடங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது. மொழியை காக்க எங்களால் மொழிப்போரும் நடத்த முடியும். அந்த மொழிக்கு பெருமை ஏற்படுகின்ற இது போன்ற இலக்கிய விழாக்களும் நடத்த முடியும் என்பதை இந்த அரசு நடத்தி கொண்டு இருக்கிறது.

நமது கடமை

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழக மக்கள் தொகையில் 6-ல் ஒருவர் அரசு பள்ளி மாணவராக இருப்பது பெருமை அளிக்கிறது. அரசு பள்ளி என்றால் வறுமையில் இருப்பவர்களுக்கு என்ற நிலையை மாற்றி அரசு பள்ளி என்றால் பெருமை மிகுந்தது என்ற நிலையை உருவாக்கி வருகிறோம்.

தற்போது குழந்தைகள் மத்தியில் இலக்கியத்தை கொண்டு செல்ல வேண்டும் என்பது நமது கடமையாக உள்ளது. முற்போக்கு சிந்தனையை சிறுவர்களிடம் கொண்டு வர வேண்டும் என்பதற்காக வாசிப்பு திறனை ஊக்குவிக்க வேண்டும்.

முதல்-அமைச்சர் எழுத்தாளர்களின் எழுத்துக்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தின் அடையாளமே கனவு இல்ல திட்டமாகும். தமிழகத்தில் தற்போது நடைபெறும் தி.மு.க. ஆட்சியில் தமிழ் எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், படைப்பாளிகள், தமிழ்மொழி ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் ராஜகண்ணப்பன்

விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசுகையில், 'தமிழக அரசு பள்ளி கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. கல்வியை கற்றுக் கொடுக்கும் சிறந்த இடமாக தமிழகம் விளங்குகிறது. தமிழகத்தில் திராவிட மாடல் அரசு நடக்கிறது. இதனால் தமிழகத்தில் இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம் என மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் அதிகம் செயல்படுத்தப்படுகிறது.

இந்தியாவில் 14-வது இடத்தில் இருந்த தமிழக தொழில்துறை தற்போது 3-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இதனை முதல் இடத்திற்கு கொண்டுவர முதல்-அமைச்சர் முயற்சி எடுத்து வருகிறார்' என்றார்.

எழுத்தாளர்கள்

விழாவில் எழுத்தாளர்கள் கல்பெட்டா நாராயணன், வண்ணதாசன், செல்லத்துரை ஆகியோர் பேசினார்கள்.

நிகழ்ச்சியில் அப்துல்வகாப் எம்.எல்.ஏ., மேயர் சரவணன், துணைமேயர் ராஜூ, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ, உதவி கலெக்டர்கள் சந்திரசேகர், முகமது சபீர் ஆலம், துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், முன்னாள் எம்.பி. விஜிலாசத்யானந்த், பாளையங்கோட்டை யூனியன் தலைவர் கே.எஸ்.தங்கபாண்டியன், மண்டல தலைவர் பிரான்சிஸ், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பரமசிவ அய்யப்பன், சூப்பர் மார்க்கெட் தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, இளைஞர் அணி ஆறுமுகராஜா, பாளையங்கோட்டை தாசில்தார் ஆனந்தபிரகாஷ், முதன்மை கல்வி அலுவலர் திருப்பதி, பேராசிரியர்கள் வளன்அரசு, மகாதேவன், தி.மு.க.தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஆ.பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நிறைவு பெறுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்