தேவர் நினைவிடத்தில் அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை

பசும்பொன்னில் தேவர் ஜெயந்திவிழா மற்றும் குருபூஜையையொட்டி முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தினார்கள்.;

Update: 2022-10-30 23:12 GMT

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் 115-வது ஜெயந்தி விழா மற்றும் 60-வது குரு பூஜை விழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலை 7 மணிக்கு சிறப்பு யாகசாலை பூஜை நடந்தது.

பின்னர் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கே.ஆர்.பெரியகருப்பன், ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், பி.மூர்த்தி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்பட பலர் மரியாதை செலுத்தினர்.

உதயநிதி ஸ்டாலின்

தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. மாலை 4.30 மணி அளவில் வந்து மலர் தூவி, தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

அவருடன் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் பலரும் மரியாதை செலுத்தினர்.

அ.தி.மு.க.

முன்னதாக காலை 10 மணி அளவில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், காமராஜ், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ உள்பட கட்சி நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

இதேபோல் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தேவர் உருவச்சிலைக்கு மரியாதை செலுத்தினார். அப்போது முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், எம்.எல்.ஏ.க்கள் மனோஜ்பாண்டியன், அய்யப்பன் மற்றும் ஜே.சி.டி.பிரபாகரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

பா.ஜனதா சார்பில் மரியாதை

பா.ஜ.க. சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, நயினார் நாகேந்திரன் எம்.எல்..ஏ., மாவட்ட தலைவர் கதிரவன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு, தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

அப்போது "அடுத்த தேவர் ஜெயந்தி விழாவுக்கு பிரதமர் மோடியை அழைத்து வருவோம்" என்று அண்ணாமலை கூறினார்.

சசிகலா, டி.டி.வி.தினகரன்

இதேபோல் சசிகலா, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோரும் தனித்தனியாக மரியாதை செலுத்தினர்.

கனிமொழி

தூத்துக்குடியில் உள்ள தேவர் சிலைக்கு கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

வைகோ

தேவர் நினைவிடத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மரியாதை செலுத்தினார். புதூர் பூமிநாதன் எம்.எல்.ஏ. உள்பட அக்கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மூத்த தலைவர் ஜி.கே.மணி, அக்கட்சி நிர்வாகிகளுடன் மரியாதை செலுத்தினார்.

முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவரும், நடிகருமான கருணாஸ், மாநில பொருளாளர் முத்துராமலிங்கம் உள்பட நிர்வாகிகள் மரியாதை செலுத்தினா். மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், மூவேந்தர் முன்னணி கழக தலைவர் டாக்டர் சேதுராமன் மற்றும் பல்வேறு அமைப்புகள், கட்சிகளை சேர்ந்தவர்கள் மரியாதை செலுத்தினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்