திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி விழா ஏற்பாடுகளை அமைச்சர்கள் நேரில் ஆய்வு

திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி விழா ஏற்பாடுகளை அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் புதன்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டனர். உணவின் தரம் குறித்து பக்தர்களிடம் கருத்து கேட்டனர்.;

Update: 2022-10-26 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா ஏற்பாடுகளை அமைச்சர்கள் சேகர் பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

கந்தசஷ்டி திருவிழா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நேற்று முன்தினம் யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கூடாரங்களில் ஏராளமான பக்தர்கள் தங்கியிருந்து விரதம் மேற்கொண்டு வருகின்றனர். விழா நாட்களில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்கின்றனர்.

விழாவின் சிகர நாளான வருகிற 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் கோவில் கடற்கரையில் நடைபெறும் சூரம்ஹாரத்தை காண்பதற்காக பல லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி கோவில் வளாகம், கடற்கரையில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.

அமைச்சர்கள் ஆய்வு

இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று மாலையில் திருச்செந்தூர் கோவிலுக்கு திடீரென வந்து, பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளதா? என பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கோவில் அன்னதான மண்டபத்தில் சாப்பிட்ட பக்தர்களிடம் உணவின் தரம் குறித்தும் கேட்டறிந்தனர்.

மேலும், கோவில் வளாகத்தில் செயல்படுகின்ற சிறப்பு மருத்துவ முகாமையும், சுகாதார வசதிகளையும் பார்வையிட்டனர்.

தங்கத்தேர் இழுத்தனர்

பின்னர் கோவிலில் சாமி தரிசனம் செய்த அமைச்சர்கள், இரவில் தங்கத்தேர் இழுத்து வழிபட்டனர்.

மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் (தூத்துக்குடி), சரவணன் (நெல்லை), கூடுதல் கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், அறநிலையத்துறை கூடுதல் ஆணையர்கள் கண்ணன், திருமகள், கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி, அறங்காவலர் கணேசன், திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி, தாசில்தார் சுவாமிநாதன், துணை தாசில்தார் பாலசுந்தரம், தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி, ஆணையாளர் வேலவன், மாவட்ட ஆவின் தலைவர் சுரேஷ்குமார், கவுன்சிலர் செந்தில்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்