நெல் கொள்முதல் நிலையங்களில் அமைச்சர்கள் ஆய்வு
நெல் கொள்முதல் நிலையங்களில் அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டனர்;
பின்னர் அமைச்சர் சக்கரபாணி நிருபர்களிடம் கூறியதாவது:-
தேக்கம் அடையாமல் நெல் கொள்முதல்
சேமிப்பு கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த நெல் மூட்டைகளில் இருந்து நெல் மாதிரிகள் எடுத்து ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்தோம். அதில் 14 சதவீதம் ஈரப்பதம் இருக்கிறது. நெல் மூட்டைகள் மழையில் நனையவில்லை. அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் சாக்கு, சணல் ஆகியவை கையிருப்பு உள்ளது.
விவசாயிகளை காத்திருக்க வைக்காமல் நெல் தேக்கம் அடையாமல் கொள்முதல் செய்ய முதல்-அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். 3 லட்சம் மெட்ரிக் டன் நெல் சேமிக்கும் வகையில் செமி குடோன் கட்டவும், தமிழகத்தில் தனியார் பங்களிப்புடன் 13 இடங்களில் அரவை ஆலைகள் திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
கடும் நடவடிக்கை
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அங்கு அனைத்து தகவல்களுடன் பதாகை வைக்கப்பட்டுள்ளது. குறைகள் இருந்தால் அந்த பதாகையில் குறிப்பிடப்பட்டுள்ள எண்களில் தொடர்பு கொண்டு விவசாயிகள் புகார் தெரிவிக்கலாம். அதேபோல் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படும் போது நெல் மூட்டைக்கு இவ்வளவு பணம் என விவசாயிகளிடம் கேட்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
முறையாக பராமரிக்கப்படவில்லை
கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் நெல் சேமிப்பு குடோன்களை முறையாக பராமரிக்கவில்லை. நெல் சேமிப்பு குடோன்களுக்கு சிமெண்டு ரோடு, மின்சார வசதி இல்லாமல் முறையாக பராமரிப்பு செய்யாமல் இருந்து விட்டு தற்போது முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எங்களை குற்றம் சாட்டுவதற்கு நாங்கள் பொறுப்பல்ல. இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அங்கு பணியில் இருந்த தொழிலாளர்களிடம் அமைச்சர்கள் குறைகளை கேட்டறிந்தனர். மேலும் மொன்னையம்பட்டி திறந்த வெளி சேமிப்பு கிடங்கிற்கு தேவையான வசதிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு, அமைச்சர்கள் உத்தரவிட்டனர்.
எம்.எல்.ஏ.க்கள்
இந்த ஆய்வின்போது எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் உமா மகேஸ்வரி, தஞ்சை தாசில்தார் மணிகண்டன் மற்றும் அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.