கட்டபெட்டு கூட்டுறவு தொழிற்சாலையில் அமைச்சர் ஆய்வு
கோத்தகிரி அருகே கட்டபெட்டு கூட்டுறவு தொழிற்சாலையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு செய்தார்.;
கோத்தகிரி,
கோத்தகிரி அருகே கட்டபெட்டு கூட்டுறவு தொழிற்சாலையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு செய்தார்.
அமைச்சர் ஆய்வு
தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று நீலகிரி மாவட்டத்தில் கட்டபெட்டு கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையின் செயல்பாடுகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சின்ன கரும்பாலம் பகுதியில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பொது வசதி மையத்தை ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து கேத்தி அல்லஞ்சியில் நடந்து வரும் குடியிருப்பு கட்டுமான பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார்.
அதன் பின்னர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:- நீலகிரியில் இன்கோசர்வ் நிறுவனம் சார்பில், 16 தேயிலை தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு ரூ.60 கோடி மதிப்பில் புதிய எந்திரங்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கட்டபெட்டு தொழிற்சாலையில் ஆண்டிற்கு 6 லட்சம் கிலோ தேயிலைத்தூள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
சிட்கோ தொழிற்சாலைகள்
தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் அல்லஞ்சியில் ரூ.19.71 கோடியில் 180 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. இந்த குடியிருப்புகள் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் வீடு இல்லாதவர்களுக்கு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் சமச்சீர் தொழில் வளர்ச்சி அடைய 6 இடங்களில் சிட்கோ தொழிற்சாலைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், அரசு செயலர் அருண் ராய், கலெக்டர் அம்ரித், இன்கோசர்வ் தலைமை செயல் அலுவலர் (பொறுப்பு) மோனிகா, குன்னூர் சப்-கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி, தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் முதன்மை பொறியாளர் ராஜசேகர், கண்காணிப்பு பொறியாளர் நஞ்சப்பன், செயற்பொறியாளர் வெங்கடேசன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.