அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திங்கட்கிழமை தூத்துக்குடி வருகை:பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திங்கட்கிழமை தூத்துக்குடி வருகிறார். அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார் .
தூத்துக்குடிக்கு இன்று (திங்கட்கிழமை) வருகை தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
திமு.க. மாநில இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வருகிறார். மாலை 3.30 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன் நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
மாலை 4.30 மணிக்கு தூத்துக்குடி மாணிக்கம் மகாலில் ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. சார்பில் கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கி பேசுகிறார். 5.30 மணிக்கு தூத்துக்குடி அருகே உள்ள சூசைப்பாண்டியாபுரத்தில் ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
உற்சாக வரவேற்பு
இதனை முன்னிட்டு தூத்துக்குடிக்கு வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிப்பதற்காக வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், தெற்கு மாவட்ட செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன.
தூத்துக்குடி வாகைகுளத்தில் இருந்தே அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்று ஏராளமான வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன. சாலையின் இருபுறமும் கம்பங்கள் நடப்பட்டு, தி.மு.க. கொடிகள் பறக்க விடப்பட்டு உள்ளன. விழா நடைபெறும் பகுதிகளில் அலங்கார வரவேற்பு வளைவுகளும் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் தூத்துக்குடி விழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது.