அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வருகை

ிருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 14,300 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இதனையொட்டி அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் பிரமாண்ட வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Update: 2023-07-16 17:56 GMT

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றபின் முதல்முறையாக திருப்பத்தூர் மாவட்டத்திற்கு இன்று (திங்கட்கிழமை) வருகை தருகிறார். இதற்காக அவருக்கு மாவட்டம் முழுவதும் உற்சாக வரவேற்பு அளிக்க தி.மு.க.வினர் சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்ட எல்லையான மாதனூரில் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.

அதைத்தொடர்ந்து ஆம்பூரில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காலை 9 மணிக்கு கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 100 அடி உயர பிரமாண்ட கொடி கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றி வைக்கிறார். அதனை தொடர்ந்து வாணியம்பாடி அருகே தனியார் மண்டபத்தில் தி.மு.க. சமூக வலைதள செயற்பாட்டாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.

நலத்திட்ட உதவி

பின்னர் வாணியம்பாடியில் தேசிய நெடுஞ்சாலையில் 100 அடி உயர கொடி கம்பத்தில் தி.மு.க. கொடியேற்றுதலும், தொடர்ந்து செட்டியப்பனுர் கூட்ரோட்டில் சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நிழற்கூடத்தையும் அவர் திறந்து வைக்கிறார்.

தொடர்ந்து காலை 11 மணிக்கு ஜோலார்பேட்டை அருகே மண்டலவாடியில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சுமார் 14 ஆயிரத்து 300 பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். இந்த விழா ஏற்பாடுகளை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் பாச்சல் ஊராட்சியில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நிழற்கூடத்தை திறந்து வைத்து, திருப்பத்தூர் விருந்தினர் மாளிகையில் மதிய உணவு அருந்துகிறார். மாலை 5 மணிக்கு திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து அனைத்துத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்கிறார். ஆய்வு பணிகளை முடித்து விட்டு இரவு 7 மணிக்கு தனியார் மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 1,000 தி.மு.க. முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கி பேசுகிறார்.

அங்கு நிகழ்ச்சியை முடித்துவிட்டு இரவு ஏலகிரிமலையில் ஓய்வு எடுக்கிறார்.

விழாக்கோலம்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் சாலையின் இருபுறங்களுக்கும் கட்சி கொடி கட்டப்பட்டு விழாக்கோலம் பூண்டு உள்ளது. ஏற்பாடுகளை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் க.தேவராஜி, அ.நல்லதம்பி, அ.செ.வில்வநாதன் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்