திருச்சி அரசு பள்ளியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு
திருச்சி அரசு பள்ளியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பள்ளி மாணவ-மாணவிகளுடன் அமர்ந்து காலை உணவை சாப்பிட்டார்.
திருச்சி அரசு பள்ளியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பள்ளி மாணவ-மாணவிகளுடன் அமர்ந்து காலை உணவை சாப்பிட்டார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள சையது முர்துஷா அரசு மேல்நிலைப்பள்ளியில் இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்காக காலை உணவு தயாரிக்கும் கூடத்தை பார்வையிட்டார்.
அப்போது உணவின் தரம் சரியாக இருக்கிறதா?. மாணவர்களுக்கு சரியான அளவில் உணவு வழங்கப்படுகிறதா? என்பதையும் ஆய்வு செய்தார். தொடர்ந்து கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, பள்ளி பதிவேடுகள் உள்ளிட்டவைகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அந்த பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுடன் அமர்ந்து காலை உணவை சாப்பிட்டார்.
அதன்பிறகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பள்ளி மாணவ-மாணவிகள் முன்னிலையில் பேசியதாவது:-
மாணவர்களுடன் சாப்பிடுவது மகிழ்ச்சி
முதல்-அமைச்சர் மாணவர்களுக்காக அறிவித்த நல்ல திட்டமான காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை ஆய்வு செய்வதற்காக எந்த மாவட்டத்துக்கு சென்றாலும் அங்குள்ள பள்ளியில் மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவை சாப்பிடுவது தான் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி.
அப்படியே சாப்பிடும்போது, அந்த மாணவர்களுடன் பேசிக்கொண்டே, அவர்களுடைய கல்வியை பற்றியும், குடும்ப பின்னணி பற்றியும் கேட்பேன். மேலும், பள்ளிக்கூடத்தில் சரியான நேரத்தில் சாப்பாடு வழங்குகிறார்களா? ஆசிரியர்கள் சரியாக பாடம் நடத்துகிறார்களா?. தினமும் பள்ளிக்கு வருகிறீர்களா? என்பதை கேட்டுவிட்டு தான் எனது ஒருநாள் வேலையை தொடங்குவேன்.
சிந்தனையை சிதறவிடாதீர்கள்
மாணவர்களுக்கென்று பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். அதையெல்லாம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். இதையெல்லாம் உங்களுடைய நலனை கருத்தில் கொண்டு தான் இந்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. முதல்-அமைச்சர் தொடர்ந்து சொல்வது, மாணவர்களாகிய நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்படாதீர்கள். உங்களுடைய சிந்தனையை சிதறவிடாதீர்கள். உங்களுடைய முழு நோக்கமும் கல்விஅறிவை பெறுவதில் தான் இருக்க வேண்டும்.
உங்களுக்கு ஒரு தாயாக, ஒரு தந்தையாக முதல்-அமைச்சரும், இந்த அரசும் இருந்து உங்களுக்கு என்னென்ன தேவையோ அனைத்தையும் செய்வோம். மாணவர்களாகிய நீங்கள் கல்வியில் கவனம் செலுத்தி ஒரு ஆசிரியராக, ஒரு தொழில்அதிபராக இந்த நாடே பெருமைப்படும் அளவில் கல்வியை வளர்த்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆய்வின்போது, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
முன்னதாக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் சையது முர்துஷா பள்ளியில் கடந்த 2007-ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட வகுப்பறையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.