முதல்-அமைச்சர் அறிவித்த திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்- அதிகாரிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவு
முதல்-அமைச்சர் அறிவித்த திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டார்.;
முதல்-அமைச்சர் அறிவித்த திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டார்.
ஆய்வுக்கூட்டம்
மதுரை மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், கோ.தளபதி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அரசு செயலாளர் தாரேஸ் அகமது, கலெக்டர் சங்கீதா, போலீஸ் கமிஷனர் லோகநாதன், மேயர் இந்திராணி, மாநகராட்சி கமிஷனர் பிரவீன்குமார், கூடுதல் கலெக்டர் மோனிகா ராணா, வெங்கடேசன் எம்.எல்.ஏ., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், வருவாய் அலுவலர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த திராவிட மாடல் அரசு பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணும் நோக்கத்தில் "முதல்வரின் முகவரி" என்ற தனித்துறை தொடங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில் 1,07,179 மனுக்கள் பெறப்பட்டு அதில் 74,805 மனுக்கள் ஏற்கப்பட்டும், 30,602 மனுக்கள் நிராகரிக்கப்பட்டும், 1,772 மனுக்கள் நடவடிக்கையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வரின் முகவரி என்ற திட்டத்தின்கீழ் மக்கள் தரும் மனுக்களுக்கு மதிப்பளித்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில் மொத்தம் 949 பள்ளிகளில் 52,298 மாணவ-மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.
மகளிர் குழு
மதுரை மாவட்டம் வீரபாண்டி பகுதியிலுள்ள பள்ளியில் சிறப்பு திட்ட செயலாக்க குழு ஆய்வு செய்தபோது காலை உணவுத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உணவில்(சாம்பார்) 5 வகையான காய்கறிக்கு பதிலாக ஒரே ஒரு காய்கறி மட்டும் இருந்தது கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பொறுப்பு அலுவலரிடம் விளக்கம் கேட்டு கலெக்டர் அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்க வேண்டும். குடிநீர் வினியோகம், சாலை பணிகள், ஊரகப்பகுதிகளில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதி மேம்பாடு போன்ற பணிகளில் எவ்வித தொய்வுமின்றி செயல்படுத்தப்படுவதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.
சுயஉதவிக் குழுக்கள் சுயதொழில் தொடங்க கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் 17,372 சுயஉதவிக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த குழுக்களுக்கு ரூ.980 கோடி கடன் உதவிகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ.466.56 கோடி மதிப்பீட்டில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
கோரிப்பாளையம் மேம்பாலம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை மாவட்டத்திற்கு பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை அறிவித்துள்ளார். குறிப்பாக, மதுரை மாநகராட்சி மற்றும் டைடல் நிறுவனம் இணைந்து முன்னோடி டைடல் பூங்கா அமைத்தல், அலங்காநல்லூர் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான பிரமாண்ட அரங்கம் அமைத்தல், மதுரை அரசு மருத்துவமனையில் ஜப்பான் பன்னாட்டு முகமை திட்டத்தின் கூடுதல் மருத்துவ உபகரணங்கள் வழங்குதல், 400 படுக்கை வசதிகளுடன் ஒருங்கிணைந்த குழந்தைகள் நல மையம் அமைத்தல், சிறைச்சாலையை இடமாற்றம் செய்தல், கோரிப்பாளையம் மேம்பாலம் அமைத்தல் போன்ற பல்வேறு திட்டப் பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பணிகள் அனைத்தும் பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ளன. இந்த பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்கள் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.