என்.எல்.சி. இந்தியா நிறுவனத்திற்குபுதிதாக நிலம் கையகப்படுத்த வேண்டிய சூழ்நிலை இப்போது இல்லைகடலூரில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேட்டி

என்.எல்.சி. இந்தியா நிறுவனத்திற்கு புதிதாக நிலம் கையகப்படுத்த வேண்டிய சூழ்நிலை இப்போது இல்லை என்று கடலூரில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறினார்.

Update: 2023-03-06 19:48 GMT

பணி ஆணை

என்.எல்.சி. இந்தியா நிறுவனத்திற்கு நிலம் கொடுத்த 10 பேருக்கு பணி நியமன ஆணை மற்றும் ஏற்கனவே நிலத்தை ஒப்படைத்து ரூ.6 லட்சம் பெற்றுக்கொண்டவர்களில் 7 பேருக்கு ஏக்கர் ஒன்றுக்கு கருணைத்தொகையாக தலா ரூ.3 லட்சத்திற்கான காசோலை வழங்கும் நிகழ்ச்சி கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். என்.எல்.சி. இந்தியா நிறுவன இயக்குனர் (சுரங்கம்) சுரேஷ்சந்திரசுமன் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் தமிழக வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பணி ஆணை மற்றும் காசோலை வழங்கினார்.

இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் மற்றும் என்.எல்.சி. அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பேச்சுவார்த்தை முடிவு

கடலூர் அருகே நடந்த வெடி விபத்தில் காயமடைந்தவர்களை பார்வையிட்டு ஆறுதல் கூறுவதற்காக வந்தோம். அதன்பிறகு என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு, பணி ஆணை வழங்குகிற நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. அப்போது என்னை பா.ம.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் சந்திக்க வந்தார்கள். இது எதார்த்தமாக நடந்த சந்திப்பு.

விவசாயிகளுக்காக நாங்களும் போராடி இருக்கிறோம். வேலைவாய்ப்பை பெற்று கொடுத்துள்ளோம். விட்டு போனவர்களுக்கு வேலைவாய்ப்பு, இழப்பீடு கேட்டு நாங்களும் போராட்டம் நடத்தினோம். அவர்களும் போராட்டம் நடத்தினார்கள். இப்போது அதை நிறைவேற்றுகிற சூழல் வந்துள்ளது. தவறாக 25 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்த போவதாக சொல்கிறார்கள். கையகப்படுத்திய நிலத்திற்கு தான் இப்போது கூடுதல் இழப்பீடு, வேலைவாய்ப்பு குறித்த பேச்சுவார்த்தை முடிவுற்று இருக்கிறது.

3 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு

இன்னும் 5 ஆண்டு காலத்திற்கு 2 ஆயிரத்து 500 ஏக்கர் நிலம் தான் தேவைப்படுகிறது. இது ஏற்கனவே கையகப்படுத்தியது. இதற்கு தான் கூடுதல் இழப்பீடு கேட்கிறார்கள். அவர்களது திருப்தியுடன் தான் வேலைவாய்ப்பு, இழப்பீடு வழங்கப்படுகிறது. 3 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக என்.எல்.சி. இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. என்.எல்.சி.க்கு புதிதாக நிலம் கையகப்படுத்த வேண்டிய சூழ்நிலை இப்போது இல்லை.

இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார். பேட்டியின் போது அய்யப்பன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா, மாநகர தி.மு.க. செயலாளர் கே.எஸ்.ராஜா மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்