ஏலகிரி மலையில் ரூ.3 கோடியில் சாகச தளம் அமைக்கும் பணி அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்

ஏலகிரிமலையில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் சாகச தளம் அமைக்கும் பணியை சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் தொடங்கி வைத்தார்.;

Update: 2022-11-29 19:00 GMT

ஜோலார்பேட்டை,

ஏலகிரிமலையில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் சாகச தளம் அமைக்கும் பணியை சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் தொடங்கி வைத்தார்.

ரூ.3 கோடியில் சாகச தளம்

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையில் சாகச தளம் அமைப்பதற்கான தொடக்க விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா, சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி ஆகியோர் தலைமை தாங்கினார். ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி முன்னிலை வகித்தார்.

சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் கலந்துகொண்டு ரூ.3 கோடியில் சாகச தளம் அமைப்பதற்கான பணிகளை தொடங்கிவைத்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

மாஸ்டர் பிளான்

முதல்-அமைச்சர் ஆணைக்கிணங்க ஏலகிரி மலையில் தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் மூலமாக சுற்றுச்சூழல் தளம் வர இருக்கிறது. ஏலகிரி மலையில் அத்தனாவூர் கிராமத்தில் இப்பணி தொடங்கப்பட்டுள்ளது. ஏலகிரி மலைக்கு வரும் நெடுஞ்சாலைகளை பொதுப்பணித்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்து, சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு முழுவதுமாக 1500-க்கும் மேற்பட்ட சுற்றுலா தலங்கள் இருக்கிறது. அதில் 300 இடங்களை தேர்வு செய்து மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டு வருடத்திற்கு 10 முதல் 15 இடங்களை தேர்வு செய்து தமிழ்நாடு அரசின் நிதியின் மூலம் புதுவகையான சுற்றுலா மேம்பாட்டினை கொண்டுவர இருக்கிறோம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஜவ்வாது மலை, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலைக்கும், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பிறப்பன் வலசை, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சித்தாறு, தென்காசி மாவட்டத்தில் உள்ள குண்டார் அணை, சென்னையில் உள்ள கொலவாய் ஏறி, பூண்டி போன்ற வெவ்வேறு மாவட்டங்களில் உள்ள சுற்றுலா தலங்கள் மேம்பட உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விழாவில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கு.செல்வராசு, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், மாவட்ட பால்வளத் தலைவர் ராஜேந்திரன், மாவட்ட சுற்றுலா அலுவலர் கதேந்திரகுமார், ஜோலார்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் எஸ்.சத்யா சதிஷ் குமார், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் கவிதா தண்டபாணி, சிந்துஜா ஜெகன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஏலகிரிமலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன், உதவி செயற்பொறியாளர் ரவி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்