67 ஆயிரம் பேருக்கு இலவச முககவசம் மக்களுக்கு அணிவித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விழிப்புணர்வு

சென்னை மயிலாப்பூரில் 4 மணி நேரத்தில் 67 ஆயிரத்து 500 பேருக்கு இலவச முககவசங்கள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நேற்று வழங்கப்பட்டது.

Update: 2022-06-29 23:07 GMT

சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. தினந்தோறும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே முககவசம் அணியாதவர்களிடம் ரூ.500 அபராதம் விதிக்கும் நடைமுறை மீண்டும் தொடங்கி உள்ளது. கொரோனாவின் வேகத்துக்கு முட்டுக்கட்டை போடும் நடவடிக்கையில் தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தீவிர கவனம் செலுத்தி உள்ளது.

அந்த வகையில் சென்னை மயிலாப்பூர் லஸ் கார்னர் பகுதியில் 50 ஆயிரம் பேருக்கு இலவச முககவசம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. 'முககவசம், உயிர்கவசம்' என்ற வாசகம் பொறித்த 'டீ-சர்ட்' அணிந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொதுமக்களுக்கு முககவசங்களை இலவசமாக வழங்கினார்.

முககவசம் அணியாமல் வந்த வயதானவர்களுக்கு அவரே முககவசம் அணிவித்து, அறிவுரை வழங்கினார். வாகனங்களில் முககவசம் அணியாமல் சென்றவர்களுக்கு வாகனத்தை நிறுத்தி முககவசம் வழங்கினார். மாநகர பஸ்களில் ஏறி முககவசம் அணியாத பயணிகளுக்கு முககவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சாலையோர வியாபாரிகளுக்கு முககவசம் வழங்கி, விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களையும் வினியோகித்தார்.

காலை 9 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் முககவசங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், மயிலாப்பூர் எம்.எல்.ஏ.வேலு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ப.செந்தில்குமார், இணை கமிஷனர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவாத், பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் உள்பட அதிகாரிகளும், அரசு நர்சிங் பயிற்சி கல்லூரி மாணவிகள், தன்னார்வலர்களும் இப்பணியில் இணைந்திருந்தனர்.

10-ந் தேதி தடுப்பூசி முகாம்

இந்த நிகழ்ச்சியின்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, கோவை மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. தொற்று பரவலை தடுப்பதற்கும், குறைப்பதற்கும், தொற்று இல்லாத நிலையை உருவாக்குவதற்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வருகிற 10-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழகத்தில் 31-வது மெகா தடுப்பூசி முகாம் ஒரு லட்சம் இடங்களில் நடைபெற இருக்கிறது. சென்னையில் 3 ஆயிரம் இடங்களில் நடைபெற உள்ளது.

முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டிய 38 லட்சத்து 22 ஆயிரத்து 687 பேரும், 2-வது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டிய ஒரு கோடியே 10 லட்சத்து 12 ஆயிரத்து 627 பேரும் என ஒரு கோடியே 48 லட்சத்து 34 ஆயிரத்து 314 பேர் பட்டியலை எடுத்து இருக்கிறோம். இவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக 67 ஆயிரத்து 500 முககவசங்கள் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் 50 ஆயிரம் முககவசங்கள் வழங்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த இலக்கையும் தாண்டி, அனைத்து முககவசங்களும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்