மனநல காப்பகத்தில் இணைந்த காதல் ஜோடிக்கு திருமணம் - கல்யாண பரிசாக பணி நியமன ஆணை வழங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மனநல காப்பகத்தில் இணைந்த காதல் ஜோடிக்கு தடல்புடலாக நேற்று திருமணம் நடந்தது. கல்யாண பரிசாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் மணமக்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கவிட்டார்.;

Update: 2022-10-29 07:04 GMT

சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் சிகிச்சைக்காக வந்த இடத்தில் சென்னையை சேர்ந்த மகேந்திரனுக்கும் (வயது 42), வேலூரை சேர்ந்த தீபாவுக்கும் (36) இடையே காதல் மலர்ந்தது. இந்த காதலுக்கு உறவினர்கள், மனநல காப்பக இயக்குனர், டாக்டர்கள், நர்சுகள் பச்சைக்கொடி காட்டினர்.

அதன்படி, இவர்களுக்கான திருமணம், கீழ்ப்பாக்கம் மனநல காப்பக வளாகத்தில் நேற்று நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை மனநல காப்பகத்தின் இயக்குனர், டாக்டர்கள், நர்சுகள் தடல்புடலாக செய்து இருந்தனர். காப்பகத்துக்கு வெளியில் உள்ள கோவிலில் மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் இந்து முறைப்படி திருமணம் நடந்து முடிந்தது.

முகமலர்ச்சியோடு மணமக்கள் திருமண கோலத்தில் தாலி கட்டிய கையோடு, காப்பக வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு மேளதாளம் முழங்க அழைத்து வரப்பட்டனர். வரவேற்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, தயாநிதிமாறன் எம்.பி., வெற்றி அழகன் எம்.எல்.ஏ., மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு, கீழ்ப்பாக்கம் மனநல காப்பக இயக்குனர் பூர்ண சந்திரிகா ஆகியோர் கலந்துகொண்டனர்.

மணமக்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சியில் கல்யாண பரிசாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பணி நியமன ஆணை வழங்கி, அவர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கவிட்டார். மகேந்திரன், தீபா தம்பதியினருக்கு வாழ்க்கை பயணத்தை தொடங்கி வைத்த மனநல காப்பகத்திலேயே ரூ.15 ஆயிரம் மாத சம்பளத்தில் 'வார்டு மேலாளர்' பணிகளை இருவருக்கும் வழங்கி, அமைச்சர் மா.சுப்பிரமணியன், அவர்களின் வாழ்வுக்கு ஒளி விளக்கேற்றியுள்ளார்.

மனநல காப்பகத்தின் இயக்குனர், டாக்டர்கள், நர்சுகள் கியாஸ் அடுப்பு, பாத்திரங்கள் போன்ற சீர்வரிசையை மணமக்களுக்கு வழங்கினர். மேலும் அங்கு பணிபுரியும் நர்சுகள் வரவேற்பு மேடையில் "நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும், பொண்ணுதான்" என்ற சினிமா பாடலை பாடி வாழ்த்தினார்கள். மனநல ஆலோசனை வழங்குவது எப்படி? என்பது குறித்து பயிற்சி பெறும் மாணவர்களும் தங்களுடைய பங்குக்கு நடனம் ஆடி அசத்தினார்கள்.

வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களின் அன்பினால், மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்த மணமக்கள் சொல்ல வார்த்தை இல்லாமல் திகைத்து போய் இருந்தனர். மணமகன் மகேந்திரன் கூறும்போது, 'ரொம்ப சந்தோஷமாக இருக்கிறோம். எங்களுடைய திருமணம் இவ்வளவு பிரமாண்டமாக நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. எங்கள் வீட்டில் திருமணம் நடத்தி இருந்தால்கூட இவ்வளவு சிறப்பாக நடத்தியிருக்கமாட்டார்கள். வார்த்தைகளால் சொல்ல முடியாத மகிழ்ச்சியில் உள்ளோம்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்