தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

பன்னாட்டு விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், தற்போது தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Update: 2022-07-24 23:20 GMT

சென்னை,

சென்னை தேனாம்பேட்டை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இந்த முகாமில் மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் செந்தில்குமார், தா.வேலு எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டனர்.

முகாமில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் பேசியதாவது:-

தமிழகத்தில் 50 ஆயிரம் இடங்களில் 32-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள 3 கோடியே 54 லட்சத்து 19 ஆயிரத்து 980 பேர் தகுதியோடு இருக்கின்றனர். அதேபோல் முதல் தவணை 31 லட்சத்து 78 ஆயிரத்து 698 பேரும், 2-ம் தவணை 95 லட்சத்து 46 ஆயிரத்து 708 பேருமாக மொத்தம் 4 கோடியே 21 லட்சத்து 45 ஆயிரத்து 367 பேருக்கு தடுப்பூசி போட வேண்டியுள்ளது.

உலக அளவில் எச்சரிக்கை

முகாம்களில் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு காரணம் கடந்த 15-ந் தேதியில் இருந்து பூஸ்டர் தடுப்பூசி கட்டணமின்றி 75 நாட்களுக்கு வழங்கப்படுவது தான். இந்த சலுகை செப்டம்பர் 30-ந் தேதி வரை தான் என்பதால் மக்கள் இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

உலக சுகாதார அமைப்பு சார்பில் குரங்கு அம்மையை உலக அளவில் எச்சரிக்கையாக எடுத்து கொள்ளவும், பெரிய அளவில் கவனம் செலுத்தவும் அறிவுறுத்தியிருக்கிறார்கள். கேரளாவில் 3 பேரும், தெலுங்கானா மற்றும் டெல்லியில் தலா ஒருவரும் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே சென்னையில் தனியார் மருத்துவமனையில் ஒருவர் முகத்தில் இருந்த கொப்பளத்தின் மாதிரி எடுத்து புனேவுக்கு அனுப்பப்பட்டு பரிசோதனையில் அது குரங்கு அம்மையில்லை என தெளிவுபடுத்தப்பட்டது.

அறிகுறிகள்

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு முகத்திலோ அல்லது முழங்கைக்கு கீழேயும் எதாவது கொப்பளங்கள் போன்ற மாற்றம் இருந்தால் நேரடியாக ஒவ்வொருவரையும் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாதிப்பு இல்லை

தமிழகம்-கேரளாவின் 13 எல்லை பகுதிகளில் தரைவழியாகவும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரெயில் நிலையங்களில் கேரளாவில் இருந்து வரும் ரெயில்களை மட்டும் பரிசோதிக்க வலியுறுத்தியுள்ளோம். அனைத்து ரெயில்களையும் பரிசோதிக்க சாத்தியம் இல்லை. இன்றுவரை தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்