'மின்தடைக்கான காரணத்தை கண்டறிந்து உடனடியாக சரி செய்ய நடவடிக்கை' அமைச்சர் அறிவுறுத்தல்

மின்தடைக்கான காரணத்தை கண்டறிந்து உடனடியாக சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலர்களுடனான ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.;

Update: 2023-07-18 20:50 GMT

சென்னை,

தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட வேண்டிய சிறப்பு மின் பராமரிப்பு பணிகள், பழுதடைந்த மற்றும் சாய்வான மின்கம்பங்களை மாற்றுதல், மின்பாதைகளில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சரி செய்தல், புதிதாக நிறுவப்பட வேண்டிய பில்லர் பெட்டிகள், மழைக்காலத்தின் போது தண்ணீர் தேங்குவதன் பொருட்டு பில்லர் பெட்டிகளை உயர்த்துதல், மேல்நிலை மின்கம்பிகளை புதைவடங்களாக மாற்றுதல் உள்ளிட்ட மின் வினியோக தொடர்பான பணிகள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு அனைத்து தலைமை என்ஜினீயர்கள் மற்றும் மேற்பார்வை என்ஜினீயர்களுடன் சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

அப்போது மின்தடை ஏற்படும் இடங்களில் சிறப்பு கவனம் செலுத்தி அதற்கான காரணத்தை கண்டறிந்து உடனடியாக சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

மின்னகம் மூலம் பெறப்படும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும், தடையில்லா மின்சாரம் தொடர்ந்து கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தினார்.

மின் பராமரிப்பு பணி

தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட உள்ள தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சரியான உயரத்தில் மாற்றியமைக்க புதிய மின்கம்பங்கள் நிறுவுதல், மின்பகிர்மான பெட்டி பராமரிப்பு, மரக்கிளைகளை அகற்றுதல் ஆகிய பணிகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த மின் பராமரிப்பு பணிகளை உரிய முறையில் முன் அறிவிப்பு செய்து அதிகநேரம் மின்தடை ஏற்படாமல் மேற்கொள்ள கேட்டுக்கொண்டார்.

மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்யும்போது, கட்டணம் செலுத்திய அன்றே பெயர் மாற்றம் வழங்க சிறப்பு பெயர் மாற்ற முகாமை அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் 24-ந் தேதி முதல் நடத்திட உத்தரவிட்டார்.

கூட்டத்தில் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர் ராஜேஷ் லக்கானி, இணை மேலாண்மை இயக்குனர் விசு மஹாஜன், மேலாண்மை இயக்குனர் (மின் தொடரமைப்பு கழகம்) மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்