ராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு
ராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர் மதிவேந்தன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;
ராசிபுரம்:
ராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர் மதிவேந்தன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
புதிய சாலை
ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம் அரசம்பாளையம், மலையாம்பட்டி, குருக்கபுரம் ஆகிய பகுதிகளில் ரூ.83.22 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம் கட்டுதல், ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுதல், புதிய சாலை அமைக்கும் பணி, மயானம் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதேபோல் ராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் அங்கன்வாடி மையம் அமைத்தல், பள்ளி கட்டிடம் அமைத்தல், சாலை பணி, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்தல், குடிநீர் இணைப்பு வழங்குதல், கழிவுநீர் கால்வாய் அமைத்தல் உள்ளிட்ட 124 வளர்ச்சி திட்டப்பணிகள் ரூ.8.25 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் அரசம்பாளையம் ஊராட்சியில் ரூ.22.65 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட பணிகளையும், ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் அங்கன்வாடி மையம் கட்ட பணிகளையும் ரூ.1.17 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்ட நூலகத்தையும் அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மயான சுற்றுச்சுவர்
மேலும் அவர் மலையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வரை தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.29.90 லட்சம் மதிப்பில் 1250 மீட்டர் தொலைவிற்கு புதிதாக தார்சாலை அமைக்கும் பணியையும் குருக்கபுரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ரூ.19.50 லட்சம் மதிப்பில் வண்டிப்பேட்டை மயானத்தில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திட்டப்பணிகளை ஒப்பந்த காலத்திற்குள் விரிவாகவும், தரமாகவும் பணிகளை முடித்து விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அலுவலர்களுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது ராசிபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஜெகநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் வனிதா, உதவி பொறியாளர் சிவகுமார், ஒன்றியக்குழு உறுப்பினர் பாலச்சந்திரன், குருக்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ், பொன்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.