தமிழ்நாட்டில் 14 சுங்கச்சாவடிகளை அகற்ற தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்-அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

Update: 2023-05-08 18:45 GMT

நாமக்கல்:

தமிழ்நாட்டில் 14 சுங்கச்சாவடிகளை அகற்றமத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக அமைச்சர் எ.வ.வேலு கூறினார்

சட்டக்கல்லூரி கட்டுமான பணி

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் 15 ஏக்கர் பரப்பளவில் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரூ.92.31 கோடி மதிப்பீட்டில் அரசு சட்டக்கல்லூரி கட்டுவதற்கு நிதி ஒப்புதல் பெறப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சட்டக்கல்லூரி கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த கல்லூரியில் நிர்வாக மற்றும் வகுப்பறைகள் கட்டிடம், நுலகம், கலையரங்கம், மாணவ, மாணவிகள் விடுதி, முதல்வர் குடியிருப்பு கட்டிடம், விடுதி காப்பாளர் குடியிருப்பு கட்டிடம், பார்வையாளர் சுகாதார வளாகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

அமைச்சர் ஆய்வு

இந்தநிலையில் நேற்று சட்டக்கல்லூரி கட்டுமான பணிகளை தமிழக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறை முகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

நாமக்கல் சட்டக்கல்லூரி கட்டுமான பணியை அடுத்த ஆண்டு மே மாதம் 31-ந் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. தரமான முறையில் கட்டிடங்களை கட்டுமாறு அறிவுறுத்திஉள்ளேன். மேலும் சட்டக்கல்லூரி பணிகள் தரமாக அமைவதற்காக தர கட்டுப்பாடு பணிகளை கண்காணிக்க தனியாக ஒரு பொறியாளர் நியமிக்கப்பட்டு உள்ளார்.

சுங்கச்சாவடிகள்

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, சாலையோரங்களில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் 14 சுங்கச்சாவடிகளை அகற்றுவது தொடர்பாக மத்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டும். 7 மீட்டர் அகலம் கொண்டது மாநில சாலைகள். இருபுறத்திலும் 1½ மீட்டர் அளவில் அகலப்படுத்தி, அதில் சுங்கச்சாவடிகளை அமைக்கும் பணிகளை மத்திய அரசு மேற்கொள்கிறது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதுடன், சுங்கச்சாவடிகளை அகற்றுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

சுற்றுவட்டச்சாலை

முதல்-அமைச்சர், பிரதமரை நேரில் சந்தித்து சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். அதே போன்று நானும் மத்திய நெடுஞ்சாலை துறை மந்திரியை நேரில் சந்தித்து சுங்கச்சாவடிகளை அகற்றுவதற்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளேன். மாநில அரசு மூலம் இருவழி சாலைகள் மட்டுமே அமைக்கப்பட்டு வந்த நிலையில், போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் மூலம் மாநில அரசே 4 வழிச்சாலையை அமைக்க உள்ளது.

நாமக்கல்லில் ரூ.197 கோடி மதிப்பீட்டில் சுற்றுவட்ட சாலை அமைப்பதற்கான பணிகளுக்கு நில எடுப்பு பணிகள் நிறைவு பெற்று உள்ளது. திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, பொதுப்பணித்துறை கோவை மண்டல தலைமை பொறியாளர் இளஞ்செழியன், ஈரோடு கண்காணிப்பு பொறியாளர் சத்தியவாகிஸ்வரன், செயற்பொறியாளர் அருள் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் உடன்இருந்தனர்.

மேலும் செய்திகள்