ஈரோடு உள்பட 3 மாவட்டங்களில் புற்றுநோய் பாதிப்பு அதிகம்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

ஈரோடு உள்பட 3 மாவட்டங்களில் புற்றுநோய் பாதிப்பு அதிகமாக உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Update: 2023-05-05 22:54 GMT

பெருந்துறை

ஈரோடு உள்பட 3 மாவட்டங்களில் புற்றுநோய் பாதிப்பு அதிகமாக உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

உலக கை கழுவும் தினம்

பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உலக ைககழுவும் தினத்தையொட்டி கைகழுவுதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் வள்ளி சத்தியமூர்த்தி வரவேற்று பேசினார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மே 5-ந் தேதி உலக கை கழுவும் தினமாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. கை கழுவுதல் என்பது பெரிய விஷயமா? என்று நாம் எல்லோரும் நினைப்போம். ஆனால் முறையாக கை கழுவினால் தொற்று நோய் வாய்ப்பு ஏற்படுவது குறைந்து விடும் என்பது உண்மை.

70 சதவீதம்

மருத்துவமனைகளில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களது கைகளை அடிக்கடி கழுவுவதை நாம் பார்த்திருப்போம். ஏனென்றால் சரி வர கைகளை கழுவாவிட்டால், அதன் வழியாக நம் உடம்புக்குள் தொற்றுநோய் கிருமிகள் பரவி விடும் ஆபத்துள்ளது.

இன்றைக்கு தொற்று பரவலுக்கு முக்கிய காரணமாக இருப்பது, முறையாக கைகளை கழுவாமல் இருப்பதுதான். சோப்பு போட்டு நல்ல முறையில் கைகளை கழுவுவதால் 70 சதவீதம் நம்மால் தொற்று நோய்களிலிருந்து தப்பிக்க முடியும்.

புற்றுநோய் தாக்கம்

இன்று தமிழ்நாடு முழுவதும் 2,286 அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கை கழுவும் நிகழ்ச்சி நடக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் புற்று நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது என்று, அந்தியூர் எம்.எல்.ஏ. ஏ.ஜி.வெங்கடாசலம் சட்டமன்ற கூட்டத்தொடரின் போது கூறினார்.

ஈரோடு மட்டுமின்றி ராணிப்பேட்டை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்து வருவதாக அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் விரைவில் ஆய்வு நடத்தப்படும்.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

செயல் விளக்கம்

இதைத்தொடர்ந்து மருத்துவ கல்லூரி மாணவிகள் முறையாக கை கழுவது குறித்து செயல் விளக்கம் செய்து காட்டினர். நிகழ்ச்சியில் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ., ஈரோடு மேயர் நாகரத்தினம், பெருந்துறை வடக்கு ஒன்றிய தி.மு.க.செயலாளர் பி.சின்னச்சாமி, சின்னவீரசங்கிலி ஊராட்சி தலைவர் கண்ணம்மா தங்கவேலு, பெருந்துறை தெற்கு ஒன்றிய பிரதிநிதி எல்.ஐ.சி.பாலாஜி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆய்வு

இந்தநிலையில் நேற்று மாலை டி.என்.பாளையம் அருகே உள்ள கள்ளிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று ஆய்வு செய்தார். புறநோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், அங்குள்ள மருத்துவ வசதிகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். ஆரம்ப சுகாதார நிலையத்தை ஒட்டியுள்ள காலியிடத்தையும் சேர்த்து புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கப்படும் என்று தெரிவித்தார். அப்போது ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. உடன் இருந்தார். 

Tags:    

மேலும் செய்திகள்