தமிழகத்தில் வீட்டு வசதி வாரியத்தின் 8,822 வீடுகள்-மனைகள் விற்பனையாகாமல் உள்ளன- அமைச்சர் சு.முத்துசாமி தகவல்

தமிழகத்தில் வீட்டு வசதி வாரியத்தின் 8 ஆயிரத்து 822 வீடுகள் மற்றும் மனைகள் விற்பனை ஆகாமல் உள்ளதாக அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

Update: 2023-04-02 21:04 GMT

ஈரோடு

தமிழகத்தில் வீட்டு வசதி வாரியத்தின் 8 ஆயிரத்து 822 வீடுகள் மற்றும் மனைகள் விற்பனை ஆகாமல் உள்ளதாக அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

நலத்திட்ட உதவிகள்

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, ஈரோடு சங்கு நகரில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு 700-க்கும் மேற்பட்டோருக்கு அரிசி மற்றும் குக்கர் செட் பரிசு பொருட்களை வழங்கினார். இதைத்தொடர்ந்து அமைச்சர் சு.முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் கட்டிய கட்டிடங்கள் மற்றும் திட்டங்கள் எந்த இடத்தில் அவசியம், மக்களின் எதிர்பார்ப்பு மற்றும் தேவை குறித்து முழுமையாக ஆய்வு செய்யாததால் பல இடங்களில் கட்டிடங்கள் மற்றும் மனைகள் விற்பனை ஆகாமல் உள்ளது. அதன்படி தற்போது 8 ஆயிரத்து 822 கட்டிடங்கள் மற்றும் மனைகள் விற்கப்படாமல் இருக்கிறது. எனவே இனி வரும் காலங்களில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை வைக்கும் இடத்தில் பொதுமக்களின் தேவை இருந்தால் திட்டம் தொடங்கப்படும்.

மானிய கோரிக்கை

தற்போது சில பகுதிகள் தொழில்துறை மண்டலமாக வளர்ந்துள்ளன. முதல்-அமைச்சரின் முயற்சியால், பெரிய தொழில்கள் உருவாகின்றன. அத்தகைய தொழில்களுக்கு அனுமதி அளித்து, அவர்களது தொழிலாளர்களுக்கு வீடுகளை உருவாக்க நிலம் ஒதுக்குமாறு கூறப்படும். தொழில்துறை கிளஸ்டர்களில் அல்லது சிப்காட்டில், தொழிலாளர்கள் அருகிலுள்ள பகுதிகளில் தங்க விரும்புகிறார்கள். அத்தகைய இடங்களிலும், வாரியம் அவர்களின் தேவைகளை மதிப்பீடு செய்து வீடுகளை கட்டும். கடந்த ஆண்டு நடந்த மானியகோரிக்கையில் சென்னைக்கு அருகே செயற்கைக்கோள் டவுன்ஷிப் உருவாக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. பொருத்தமான நிலங்களை கண்டறியும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திருக்கழுக்குன்றம் அருகே ஒரு நிலம் தேடப்பட்டது. அந்த பகுதி மக்கள், நிலம் வழங்க முன்வருவார்களா என்பது குறித்து ஆய்வு நடத்தப்படும். வருகிற 13-ந்தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்படவுள்ள மானிய கோரிக்கையில், புதிய அறிவிப்புகள் வெளியாகும். கீழ்பவானி வாய்க்கால் நவீனமயமாக்கும் பணியை மேற்கொள்ள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தீர்ப்பு நகலை முழுமையாக ஆய்வு செய்த பின்னர், தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்ட பணிகளில் ஏற்பட்டுள்ள குறைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் தி.மு.க. மாநகர செயலாளர் சுப்பிரமணியம், மாநகராட்சி மேயர் நாகரத்தினம், மண்டல தலைவர்கள் பி.கே.பழனிச்சாமி, சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்