தாளவாடி, அந்தியூரில் விரைவில் அரசு கலைக்கல்லூரிகள் தொடங்கப்படும்- அமைச்சர் சு.முத்துச்சாமி பேட்டி
தாளவாடி, அந்தியூரில் விரைவில் அரசு கலைக்கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் சு.முத்துச்சாமி கூறினார்.;
கடத்தூர்
தாளவாடி, அந்தியூரில் விரைவில் அரசு கலைக்கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் சு.முத்துச்சாமி கூறினார்.
மஞ்சள்பை
கோபி நகராட்சி மற்றும் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் மஞ்சள்பை வழங்கும் நிகழ்ச்சி கோபி பஸ் நிலைய வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார்.
ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சு.முத்துச்சாமி கலந்துகொண்டு பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கி தொடங்கி வைத்தார். அப்போது அவர், 'மீண்டும் மஞ்சப்பை திட்டம் முதல்வர் ஆலோசனைப்படி தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் பைகளை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதே அவரது லட்சியமாக உள்ளது. மட்காத பிளாஸ்டிக்கால் நாம் பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டி உள்ளது. அதை ஒழிக்க தான் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் தொடங்கிவைத்த பல்வேறு திட்டங்கள் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது' என்றார்.
விழிப்புணர்வு ஊர்வலம்
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து கோபி பி.கே.ஆர். மகளிர் கல்லூரியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைெபற்றது. அமைச்சர் சு.முத்துசாமி கொடி அசைத்து ஊர்வலத்தை தொடங்கிவைத்தார். தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், கோபி நகராட்சி ஆணையாளர் பிரேமானந்த், பொறியாளர் சுப்பிரமணியன், கோபி அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் வேலுமணி மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள்.
இதேபோல் கோபி அருகே உள்ள சிறுவலூரில் உள்ள கருப்பட்டி உற்பத்தியாளர் சம்மேளனத்தின் சார்பில் பனங்கருப்பட்டியை நவீன முறையில் தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியை அமைச்சர் சு.முத்துச்சாமி தொடங்கி வைத்தார். ேமலும் பனை ஏறும் தொழிலாளர்களுக்கு உபகரணங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் முருகன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கலை கல்லூரிகள்
முன்னதாக அமைச்சர் சு.முத்துச்சாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. அந்த திட்டங்களை நிறைவேற்றுவதற்கு அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். ஈரோடு மாவட்டத்தில் இன்னும் 85 திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. தாளவாடி, அந்தியூரில் அரசு கலைக்கல்லூரிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. ஈரோட்டில் 2 பஸ் நிலையங்கள் உருவாக்கப்பட உள்ளன. எத்தனை திட்டங்கள் கேட்டாலும் அதை முதல்-அமைச்சர் நிறைவேற்றித்தர தயாராக உள்ளார். பொதுமக்கள் அரசு திட்டங்களுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.