நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, ஊக்கத்தொகை நாளை முதல் வழங்கப்படும் - தமிழக அரசு அறிவிப்பு

நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை மற்றும் ஊக்கத்தொகை நாளை முதல் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.;

Update:2022-08-31 20:38 IST

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

2022-2023-ம் ஆண்டின் காரீப் கொள்முதல் பருவத்தில் தேவையான அளவு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்ய மாநில அரசு முடிவு எடுத்து உள்ளது.

இந்த ஆண்டு வழக்கத்திற்கு முன்பாகவே மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ள நிலையிலும், விவசாயிகளுக்கு தேவையான அளவு விதைகள் மற்றும் உரங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையிலும், விவசாயிகளின் நலன் கருதி 2022-23-ம் ஆண்டு காரீப் பருவத்திற்கான நெல் கொள்முதலை நாளை (வியாழக்கிழமை) முதல் மேற்கொள்ள மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அரசு காரீப் 2022-2023 பருவத்திற்கு குறைந்தபட்ச ஆதார விலையாக சாதாரண ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்து 40 என்றும், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்து 60 என்றும் நிர்ணயித்துள்ளது. குறைந்தபட்ச ஆதாரவிலை நெல் உற்பத்தியை பெருக்கும் வகையிலும், விவசாயிகளை ஊக்கப்படுத்தவும் கடந்த ஆண்டை போன்று இந்த ஆண்டிலும் சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.75-ம், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.100-ம் கூடுதல் ஊக்க தொகையாக வழங்க ஆணை பிறப்பித்து.

அதன்படியே, தற்போது சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்து 115 என்றும், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்து 160 என்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்கும் விவசாயிகளுக்கு வழங்க தமிழக அரசு ஆணையிட்டு உள்ளது. இந்த புதிய குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் மாநில அரசின் ஊக்கத் தொகையை நாளை (1.09.2022) முதல் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்