மோட்டார் சைக்கிள்கள் மீது மினி வேன் மோதல்; விவசாயி பலி
தேவதானப்பட்டி அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் மீது மினி வேன் மோதி சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் விவசாயி பலியானார்.;
அடுத்தடுத்து மோதல்
தேவதானப்பட்டி அருகே உள்ள ஜெயமங்கலத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 40). விவசாயி. நேற்று முன்தினம் இவர், சில்வார்பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சென்றார். பின்னர் அங்கிருந்து ஜெயமங்கலம் நோக்கி அவர் மோட்டார் சைக்கிளில் திரும்பி சென்று கொண்டிருந்தார். ஜெயமங்கலம் அருகே தேவதானப்பட்டி-வைகை அணை சாலையில் உள்ள உப்பிலியப்பன் கோவில் பகுதியில் அவர் வந்து கொண்டிருந்தார்.
இதேபோல் வருசநாடு அருகே உள்ள தர்மராஜ்புரத்தை சேர்ந்தவர் அறிவழகன் (36). இவர் வேலை தொடர்பாக தேவதானப்பட்டி வந்துவிட்டு, வருசநாடு நோக்கி திரும்பி சென்றுகொண்டிருந்தார். இவரும் உப்பிலியப்பன் கோவில் பகுதியில் முத்துப்பாண்டிக்கு பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தார்.
இந்தநிலையில் எதிரே ஆண்டிப்பட்டியில் இருந்து தென்காசி நோக்கி சென்ற மினி வேன் ஒன்று வந்தது. அந்த மினி வேன் எதிர்பாராதவிதமாக முதலில் முத்துப்பாண்டியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. அதன்பிறகு கட்டுப்பாட்டை இழந்த மினி வேன், அறிவழகனின் மோட்டார் சைக்கிள் மீது மோதி சாலையில் கவிழ்ந்தது.
விவசாயி பலி
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள்களில் வந்த முத்துப்பாண்டி, அறிவழகன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அதேபோல் மினி வேனை ஓட்டி வந்த தென்காசி மாவட்டம் திருச்சிற்றம்பலத்தை சேர்ந்த முருகன் (47) என்பவரும் படுகாயம் அடைந்தார்.
இதையடுத்து விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே முத்துப்பாண்டி இறந்தார். மற்ற 2 பேருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.