மிமிக்ரி விவகாரம்: தமிழக பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் - அண்ணாமலை அறிவிப்பு

அரசியல் சாசன அமைப்புகள் இயங்க முடியாமல் முடக்கியவர்களுக்கு எதிராக நமது கண்டன குரல்கள் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.;

Update: 2023-12-20 12:33 GMT

கோப்புப்படம் 

சென்னை,

துணை ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற சபாநாயகரை தூற்றியும், அவமரியாதையும் செய்த எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை கண்டித்து தமிழக பாஜக சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

எதிர்கட்சிகளை சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், கடந்த சில நாட்களாக, பாராளுமன்ற மரபுகளை மீறியும், பொது மக்களுக்கு தாங்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டிய கடமையை மறந்தும், அரசியல் சாசன பதவியில் உள்ளவர்களிடம் அவமரியாதையாக நடந்து வந்ததையும் நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள். இந்த தவறான நடத்தையை இன்னும் அவர்கள் தொடர்ந்து கொண்டிருப்பது பாராளுமன்றத்திற்கு மட்டுமின்றி மக்கள் மன்றத்திற்கும் அவமானமாகும்.

மரியாதைக்குரிய துணை ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற சபாநாயகரை தூற்றியும், அவமரியாதையும் செய்த ராகுல் காந்தி மற்றும் அவருக்கு துணை நின்ற இதர எதிர்கட்சி தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை கண்டித்து நாளை 21.12.2023, வியாழக்கிழமை அன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டும்.

அரசியல் சாசன அமைப்புகள் இயங்க முடியாமல் முடக்கியவர்களுக்கு எதிராக நமது கண்டன குரல்கள் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்பதனை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்