சிறுதானியங்கள் மகத்துவம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுமா?

சிறுதானியங்கள் மகத்துவம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுமா?;

Update: 2023-04-11 10:34 GMT

தளி

இளம் தலைமுறையினருக்கு சிறுதானியங்களின் மகத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

உடல் ஆரோக்கியம்

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால்தான் நீடித்த வாழ்வைப் பெற முடியும். எந்த ஒரு நிகழ்வுக்கும் உடலே பிரதானம் ஆகும். பல ஆற்றல்கள் நிறைந்த உடலைக் கொண்டு உணவு உற்பத்தி, எண்ணற்ற கண்டுபிடிப்புகள், விண்ணை முட்டும் விஞ்ஞான வளர்ச்சியை பெற்றுள்ளோம். உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கு கீரைகள், காய்கறிகளுக்கு அடுத்தபடியாக தானியங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.

இதுகுறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது:-

இன்றோ போதிய ஓய்வின்மை, தூக்கமின்மை, காலம் தவறிய உணவு, முறையற்ற உணவு பழக்கவழக்கங்களால் இரண்டு தலைமுறைகளை கூட காண்பதே அரிதாக உள்ளது. மிக முக்கியமாக தானியங்கள், பாரம்பரிய அரிசி வகைகள் குறித்த அடையாளம் கூட இன்றைய இளம் தலைமுறையினருக்கு தெரியாது. காசு கொடுத்தால் டிப்பார்ட்மெண்ட் ஸ்டோரில் பொருள் கிடைக்கிறது அவ்வளவுதான்.

காரணம் கேல்வரகு, கோதுமை, கம்பு, சோளம், திணை, சாமை உள்ளிட்டவை அரைக்கப்பட்டு மாவாக மட்டுமே கிடைக்கிறது. பயிறு வகைகளில் உளுந்து, துவரை, பாசிப்பயறு போன்றவை எந்திரத்தின் மூலம் உடைக்கப்பட்டே கிடைக்கிறது. இதனால் பயிறு வகைகள் தானிய வகைகள் முழு உருவத்தை இளம் தலைமுறைகள் அறிவதிலும் அடையாளம் காண்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பாரம்பரியம்

எனவே இளம் தலைமுறையினருக்கு தானியங்கள், பயிறு வகைகளை அடையாளப்படுத்தி அதன் மகத்துவத்தையும், மருத்துவ குணத்தையும் உணர்த்த வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.

துரிதவகை, பதப்படுத்தப்பட்ட மற்றும் சத்துக்கள் இல்லாத உணவால் ஏராளமான நோய்கள் உடலை ஆட்கொண்டு வரும் தற்போதைய சூழலில் பாரம்பரியத்தை மீட்டெடுத்து நோய்நொடி இல்லாமல் வாழ்வதற்கு பழகிக் கொள்ள வேண்டும். அரசும் விவசாயத்தை முழுமையாக இயற்கை முறைக்கு மாற்றுவதற்கு முழுமூச்சில் ஈடுபடுவதுடன் அதிக அளவில் தானியங்கள் பயிறு வகைகள் சாகுபடி செய்வதற்கும் முன்னுரிமை அளித்து வழிகாட்ட வேண்டும். மேலும் இளம் தலைமுறையினர் பாரம்பரிய அரிசி, தானியங்கள், பயிறு வகைகளின் முழுஉருவத்தை தெரிந்துகொள்ளும் வகையில் அவற்றின் புகைப்படங்களை பாடபுத்தகத்தில் இடம் பெறச் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

----

Tags:    

மேலும் செய்திகள்