மிளா தாக்கி வாலிபர் பலி

கடையம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது மிளா தாக்கியதில் வாலிபர் பலியானார்.;

Update: 2023-10-03 20:08 GMT

கடையம்:

தென்காசி மாவட்டம் கடையம் பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் சொர்ணசுந்தரம். இவரது மகன் பாலமுருகன் (வயது 25). இவர் தென்காசியில் புத்தக கடை நடத்தி வந்தார்.

பாலமுருகன் கடந்த 29-ந் தேதி கடைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு ஊருக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார்.

கடையம் அருகே மாதாபுரம் பகுதியில் வந்து கொண்டு இருந்தபோது, அந்த வழியாக வனப்பகுதியில் இருந்து மிளா ஒன்று வந்தது. அந்த மிளா திடீரென்று சாலையை கடக்க முயன்றது. அப்போது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்த பாலமுருகனை மிளா தாக்கியது. இதில் அவர் கீழே விழுந்து காயம் அடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக நெல்லை பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

எனினும் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் பாலமுருகன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கடையம் போலீசார் மற்றும் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பகுதியில் தொடர்ச்சியாக வனவிலங்குகள் சாலையை கடந்து செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதை தடுக்க அந்த பகுதியில் மின் விளக்குகள் அமைக்க வேண்டும். மேலும் வனவிலங்குகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடையம் அருகே மிளா தாக்கியதில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்