சின்னசேலத்தில் பால் உற்பத்தியாளர்கள் மாடுகளுடன் போராட்டம்

பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி சின்னசேலத்தில் பால் உற்பத்தியாளர்கள் மாடுகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2023-03-28 18:45 GMT

சின்னசேலம், 

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நல சங்கத்தினர் பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரி கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பால் குளிரூட்டு நிலையம் முன்பு மாடுகளுடன் வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார்.

கால்நடை வளர்ப்போர் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் சுப்பிரமணி, மாவட்ட பொதுச்செயலாளர் கலியமூர்த்தி, மகளிர் அணி செயலாளர் லீமாரோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆலோசகர் பழனிவேல் வரவேற்றார்.

இதில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நல சங்க மாநில தலைவர் வக்கீல் ராஜேந்திரன், மாவட்ட துணைத் தலைவர் சந்திரமோகன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். தற்போது பசும்பால் லிட்டருக்கு ரூ.35-க்கும், எருமைப்பால் லிட்டருக்கு ரூ.42-க்கும் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

மானிய விலையில் கலப்பு தீவனம்

இந்த விலை எங்களுக்கு போதுமானதாக இல்லை. தீவன பொருட்களின் விலை உயர்வால் எங்களால் மாடுகளை சரியாக பராமரிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும். அதன்படி பசும்பால் லிட்டருக்கு ரூ.7 உயர்த்தி ரூ.42-க்கு கொள்முதல் செய்ய வேண்டும்.

இதேபோல் எருமைப்பால் லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி ரூ.52-க்கு கொள்முதல் செய்ய வேண்டும். மேலும் லிட்டருக்கு ரூ.7 ஊக்கத்தொகை வழங்க வேண்டும், மானிய விலையில் கலப்பு தீவனம் வழங்கிட வேண்டும், ஆவின் பால் கூட்டுறவு அமைப்பிற்கு ஆணிவேராய் செயல்படும் சங்க பணியாளர்களை பணிவரன்முறை படுத்த வேண்டும் என்று கூறி பால் உற்பத்தியாளர்கள் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட செயலாளர் தவமணி, மாவட்ட இணை செயலாளர் ராமு, மாவட்ட துணை செயலாளர் முருகன் மற்றும் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் நல சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் மாதேஷ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்