வால்பாறையில் இதமான காலநிலை:பச்சை தேயிலை உற்பத்தி அதிகரிப்பு

வால்பாறையில் இதமான காலநிலை நிலவுவதால் பச்சை தேயிலை உற்பத்தி அதிகரித்து உள்ளது.;

Update:2023-07-01 01:00 IST

வால்பாறை

வால்பாறையில் இதமான காலநிலை நிலவுவதால் பச்சை தேயிலை உற்பத்தி அதிகரித்து உள்ளது.

பச்சை தேயிலை

வால்பாறை பகுதியில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்தே மழை பெய்து வந்தது. கோடைகாலமான மே மாதத்திலும் மழை பெய்து வந்தது. வால்பாறை பகுதியை பொறுத்தவரை ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாதம் 2-வது வாரம் வரை தேயிலை உற்பத்தி குறைந்து காணப்படும். மார்ச் மாதம் இறுதி வாரத்தில் இருந்து வெப்பமான காலசூழ்நிலை தொடங்கி ஜூன் மாதம் முதல் வாரம் வரை கடுமையான வெயில் வாட்டும். இதனால் சிவப்பு சிலந்தி பூச்சி, தேயிலை கொசு, கொப்பள நோய் போன்றவை தேயிலை செடிகளை தாக்கும். இதனால் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும்.

ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக மார்ச் மாதம் இறுதி வாரத்தில் இருந்து விட்டு விட்டு மழை பெய்து வந்ததால் வால்பாறை பகுதியில் கோடைகாலத்திலும் தேயிலை உற்பத்தி அதிகரித்து காணப்பட்டது.

பசுமையாக காட்சியளிக்கின்றன

இந்த நிலையில் ஜூன் மாதத்தில் 2-வது வாரத்தில் இருந்து தென் மேற்கு பருவமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. பகலில் மதியம் வரை கடுமையான வெயில் வாட்டுகிறது.

இதனால் வால்பாறை பகுதி முழுவதும் தொடர்ந்து பச்சை தேயிலை உற்பத்தி அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகள், உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள். மேலும், எங்கு பார்த்தாலும் தேயிலை தோட்டங்கள் பசுமையாக காட்சியளித்து வருகிறது.

இந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கியது முதல் வால்பாறை பகுதிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் தேயிலை தோட்டங்களின் பசுமையை பார்த்து ரசித்து செல்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்