'மிக்ஜம்' புயல் முன்னெச்சரிக்கை: கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு
புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் டிசம்பர் 4-ம் தேதி தமிழகம் மற்றும் ஆந்திராவை கடக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மிக்ஜம் புயல் உருவாகி உள்ளது. இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் டிசம்பர் 4-ம் தேதி தமிழகம் மற்றும் ஆந்திராவை கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் புயலால் தமிழகத்தில் பல பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பொது சுகாதாரத்துறை சூறாவளிக்கான ஆயத்தக் கூட்டம் இன்று அரசாங்கத்தின் தலைமைச் செயலாளரின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதுதொடர்பாக, பொதுசுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், "சூறாவளியால் ஏற்படும் கனமழையின் போது போதுமான எண்ணிக்கையிலான சுகாதாரப் பணியாளர்கள் 24 மணி நேரமும் இருக்க வேண்டும். மருத்துவக் குழு, மருத்துவ அலுவலர், பணியாளர், செவிலியர், சுகாதார ஆய்வாளர் ஆகியோர் வெள்ளப் பாதிப்பு அதிக பாதிக்கப்படக்கூடிய தாழ்வான பகுதிகளுக்கு அத்தியாவசிய மருந்துகளுடன் இருப்பதை உறுதிசெய்யவும். ஆஸ்பத்திரியில் அவசர மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் படுக்கைகள் கிடைப்பதையும் வழங்குவதையும் உறுதி செய்தல். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதுமான எரிபொருளுடன் கூடிய பேக்கப் ஜெனரேட்டரை வைத்து 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்படுவதை உறுதிசெய்யவும்" என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்கள் அதில் விடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் 'மிக்ஜம்' புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு மேற்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் வங்கக்கடலில் உருவாகியுள்ள 'மிக்ஜாம்' புயல் சின்னத்தின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தலைமையிடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து கண்காணிக்கப்படுவதைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.