மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா
திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.;
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் விழா பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடியில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட தலைவரான பூவை.ஞானம் தலைமையில் ஒவ்வொரு ஆண்டும் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் எம்.ஜி.ஆர். பிறந்த நாளை முன்னிட்டு குமணன் சாவடியில் கோட்டை போல் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த மேடையில் எம்.ஜி.ஆரின் உருவ படத்திற்கு பூவை.ஞானம் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் 3 ஆயிரம் பெண்களுக்கு புடவை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் மற்றும் பிரியாணி விருந்தும் கொடுக்கப்பட்டது. இதில் அ.தி.மு.க. நகர செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். எம்.ஜி.ஆரின் தீவிர தொண்டரான இவர் ஆண்டுதோறும் அவரது பிறந்த நாளை நலத்திட்ட உதவிகளுடன் பிரமாண்டமாக கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் விழா திருவள்ளூர் எம்.ஜி.ஆர். சிலை அருகே நேற்று நடைபெற்றது. விழாவில் அ.தி.மு.க.வின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட துணை செயலாளரும், திருவள்ளூர் முன்னாள் நகர்மன்ற தலைவருமான கமாண்டோ அ.பாஸ்கரன் தலைமை தாங்கி எம்.ஜி.ஆர். உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதை தொடர்ந்து அங்கு திரண்டு இருந்த பொதுமக்களுக்கு அவர் இனிப்புகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் எஸ்.ஏ.நேசன், ஒன்றிய கவுன்சிலர் நரேஷ்குமார், நிர்வாகிகள் வளையாபதி, சின்னசாமி, ராமதாஸ், விஜயபாபு, குப்புராஜ், எம்.ஜி.ஆர் சீனிவாசன், அண்ணாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர். அதேபோல மணவாளநகரில் கடம்பத்தூர் ஒன்றிய செயலாளர் சூரகாபுரம் கே.சுதாகர், எம்.ஜி.ஆரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சிற்றம்பாக்கம் ஊராட்சியில் அ.தி.மு.க.வின் திருவள்ளூர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் சிற்றம் ஜெ.சீனிவாசன், சிற்றம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ரமணி சீனிவாசன் ஆகியோர் எம்.ஜி.ஆரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்கள். இதில் திரளான கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதைபோல் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாளையொட்டி கும்மிடிப்பூண்டியில் நகர அ.தி.மு.க. சார்பில் அவரது உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.விஜயகுமார் தலைமை தாங்கினார். நகர செயலாளர் எஸ்.டி.டி. ரவி, நிர்வாகிகள் டி.சி.மகேந்திரன், இமயம் மனோஜ், நாகப்பன், பி.டி.சி. ராஜேந்திரன், சிராஜீதின், முல்லை வேந்தன், டி.வி.எஸ்.சரவணன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். இதைபோல் கோட்டக்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
எல்லாபுரம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க சார்பில் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாளையொட்டி வடமதுரை பஸ் நிறுத்தம் அருகே உள்ள எம்.ஜி.ஆரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, எல்லாபுரம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க செயலாளர் எம்.மகேந்திரன் தலைமை தாங்கினார். திருவள்ளூர் மாவட்ட 15-வது வார்டு அ.தி.மு.க மாவட்ட கவுன்சிலரும், ஒன்றிய கழக இணைச் செயலாளருமான எம்.அம்மினி மகேந்திரன் முன்னிலை வகித்தார். இதில், சிறப்பு அழைப்பாளராக எல்லாபுரம் ஒன்றிய பெருந்தலைவர் வடமதுரை கே.ரமேஷ் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில், பாசறை மாவட்ட தலைவர் ஜி.ராஜீவ் காந்தி, மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளர் எம்.ராஜா, ஒன்றிய மாணவர் அணி இணைச் செயலாளர் கே.புஷ்பராஜ் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளைக் கழக நிர்வாகிகளும், சார்பு அணி நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
பொன்னேரி புதிய பஸ் நிலையத்தில் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சிறுணியம்பலராமன் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் பொன்னுதுரை முன்னிலை வகித்தார். மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், நகர செயலாளர் செல்வகுமார் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அன்னதானத்தை முன்னாள் எம்.எல்.ஏ சிறுணியம்பலராமன் வழங்கினார். இதில் மாநில எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பொன்ராஜா, கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதேபோல் ஜெகநாதபுரம் கிராமத்தில் சோழவரம் ஒன்றிய அ.தி.மு.க நிர்வாகி சம்பத் எம்.ஜி.ஆர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாளை முன்னிட்டு திருத்தணி-சித்தூர் பைபாஸ் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, பேரறிஞர் அண்ணா ஆகியோரின் உருவ சிலைகளுக்கு கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருத்தணி அரி தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல் திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆரின் உருவ சிலைக்கு திருத்தணி ஒன்றிய கழக செயலாளர் இ.என்.கண்டிகை. ஏ.ரவி, நகர செயலாளர் சௌந்தர்ராஜன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.