காண்டாமிருக வண்டுகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
தென்னையை தாக்கும் காண்டாமிருக வண்டுகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) சாந்தி விளக்கம் அளித்துள்ளார்.;
தென்னையை தாக்கும் காண்டாமிருக வண்டுகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) சாந்தி விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காண்டாமிருக வண்டுகள்
சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் 7 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தென்னை மரம் மற்றும் இளங்கன்றுகளில் காண்டாமிருக வண்டு தாக்குதல் ஜூன் முதல் செப்டம்பர் மாதங்களில் அதிகம் காணப்படுகிறது.
காண்டாமிருக வண்டுகள் தென்னையின் உச்சியில் விரிவடையாத குருத்து பாகத்தில் துளையிட்டு மரத்தின் உள்ளே சென்று மொட்டு பகுதியை மென்றுவிடுகிறது. தாக்கப்பட்ட பாகம் போக எச்சிய குருத்து விரியும் போது மட்டை கத்தரியால் வெட்டியது போல் முக்கோண வடிவில் காணப்படும்.
மகசூல் குறையும்
இதனால் 10 முதல் 15 சதவீதம் மகசூல் குறையும். காண்டாமிருக வண்டிலிருந்து தென்னங் கன்றுகள் மற்றும் மரங்களை காப்பாற்ற ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை கடைப்பிடிக்க வேண்டும். முதலாவதாக தென்னந்தோப்பு மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் காணப்படும் தேக்கமுற்ற குப்பைகள் மற்றும் கழிவுகளை உடனடியாக சுத்தம் செய்யவேண்டும்.
தாக்கப்பட்ட மடிந்து போன மரங்களை தோப்பிலிருந்து அகற்றிவிட வேண்டும். மெட்டாரைசியம் அனிசோபிலே பச்சைமஸ்கார்டைன் பூஞ்சை 250 மில்லியுடன் 750 மில்லி நீர் சேர்த்து எருக்குழிகளில் தெளிப்பதன் மூலம் வண்டுகள் மற்றும் இளம் புழுக்களை அழிக்கலாம்.
காப்பாற்ற முடியும்
முதிர்ந்த வண்டுகளை அழிக்க இளம் கன்றுகளின் குருத்து பகுதிகளில் வேப்பங்கொட்டை தூளையும் ஆற்று மணலையும் இட வேண்டும். மட்டை இடுக்களில் நாப்தலின் உருண்டை என்று சொல்லக்கூடிய அந்துருண்டைகளை இடுவதன் மூலம் காண்டாமிருக வண்டின் தாக்குதலை தவிர்க்கலாம்.
மாலை நேரங்களில் தோப்பின் அருகே விளக்குப்பொறிகள் அமைத்தும், சொக்கப்பனை கொளுத்தியும் முதிர்ந்த வண்டுகளை கவரச்செய்து அழிக்கவேண்டும். மேற்கண்ட அனைத்து ஒருங்கிணைந்த முறைகளையும் தனிநபர் அல்லாது ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்படுத்துவதன் மூலமே காண்டாமிருக வண்டின் தாக்குதலில் இருந்து தென்னை மரங்கள் மற்றும் இளங்கன்றுகளை காப்பாற்ற முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.