கோழித்தீவன மேலாண்மையை மாற்றி அமைக்க வேண்டும்

தற்போது பின்பனிக்காலம் என்பதால் கோழித்தீவன மேலாண்மை முறையை மாற்றி அமைக்க வேண்டும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2023-02-07 18:45 GMT

மழைக்கு வாய்ப்பு இல்லை

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அடுத்த 3 நாட்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மழை பெய்ய வாய்ப்பு இல்லை. வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 96.8 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 62.6 டிகிரியாகவும் இருக்கும். காற்று மணிக்கு முறையே 4 கி.மீ., 6 கி.மீ., 8 கி.மீ. வேகத்தில் வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருந்து வீசும். காற்றின் ஈரப்பதம் குறைந்தபட்சமாக 30 சதவீதமாகவும், அதிகபட்சமாக 80 சதவீதமாகவும் இருக்கும்.

சீரான உற்பத்தி நிலவும்

சிறப்பு வானிலையை பொறுத்த வரையில் 2 வாரங்களுக்கு பகல் வெப்பமும், இரவு வெப்பமும் உயர்ந்தும், குறைந்தும் நிலவி பின்பனிக்காலமாக காணப்படும். இதனால் கோழிகள் இருவிதமான வானிலைக்கு உட்படுத்திக்கொண்டு அதற்கு ஏற்றார்போல் தங்கள் உடல் இயக்கத்தை மாற்றிக்கொள்ள கால அவகாசமும், தீவன மேலாண்மை முறையை சற்றே மாற்றி அமைப்பதும் தேவைப்படும்.

பூஞ்சான நச்சு அற்ற தீவனம், 11 சதவீதத்திற்கும் குறைவான ஈரப்பதம் கொண்ட தீவனம் மற்றும் 2,500 கிலோ கலோரிக்கு குறையாத தீவனம் ஆகிய மூன்றும் கோழிகளை இருவேறு விதமான வானிலை மாற்ற அதிர்ச்சியில் இருந்து காப்பாற்றக்கூடிய தீவன மேலாண்மையாக காணப்படுகின்றன. இவற்றை கடைபிடிக்கும் பட்சத்தில் வானிலை மாற்ற அதிர்ச்சியற்ற மேலாண்மையும், அதனை தொடர்ந்து சீரான உற்பத்தியும் நிலவும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்