சென்னிமலை அருகே விபத்தில் சிக்கியமோட்டார்சைக்கிளை பொதுமக்கள் பறித்ததால் பனியன் நிறுவன ஊழியர் தற்கொலைஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் தர்ணா
சென்னிமலை அருகே விபத்தில் சிக்கிய மோட்டார்சைக்கிளை பொதுமக்கள் பறித்ததால் பனியன் நிறுவன ஊழியர் தற்கொலை செய்துகொண்டாா் இதனால் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனா்.;
சென்னிமலை அருகே விபத்தில் சிக்கிய மோட்டார்சைக்கிளை பொதுமக்கள் பறித்ததால் பனியன் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். உறவினர்கள் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பனியன் நிறுவன ஊழியர்
சென்னிமலையில் உள்ள அருணகிரிநாதர் வீதியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 46). இவர் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 28-ந் தேதி வேலை முடிந்து திருப்பூரில் இருந்து மோட்டார்சைக்கிளில் ஊத்துக்குளி வழியாக சென்னிமலை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
சென்னிமலை-ஊத்துக்குளி ரோட்டில் சிறுக்களஞ்சி என்ற இடத்தில் சென்றபோது அங்கு ரோட்டோரம் நின்று கொண்டிருந்த 4 சக்கர வாகனம் ஒன்றின் மீது தட்சிணாமூர்த்தி ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் மோதி சேதம் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் தட்சிணாமூர்த்தி ஓட்டி வந்த மோட்டார்சைக்கிளை பறித்துக்கொண்டு பணம் கேட்டுள்ளனர்.
தற்கொலை
இந்த சம்பவத்தால் மனமுடைந்து காணப்பட்ட தட்சிணாமூர்த்தி நேற்று முன்தினம் சென்னிமலை அருகே ஒட்டவலசில் உள்ள தனது மகன் பூபதி வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். இதனை பார்த்த உறவினர்கள், தட்சிணாமூர்த்தியை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு ஏற்கனவே தட்சிணாமூர்த்தி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உறவினர்கள் போராட்டம்
இதற்கிடையே தட்சிணாமூர்த்தியின் உடலை வாங்குவதற்காக உறவினர்கள் நேற்று மாலை ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அப்போது திடீரென அவர்கள் ஆஸ்பத்திரி வளாக பகுதியில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஈரோடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வராணி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது அவர்கள், 'தட்சிணாமூர்த்தியின் சாவில் சந்தேகம் உள்ளதால் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர். அதற்கு போலீசார், 'விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று உறுதி அளித்தனர். அதன்பேரில் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு தட்சிணாமூர்த்தியின் உடலை பெற்றுக்கொண்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த போராட்டத்தில் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு நிலவியது.