பேன்சி வியாபாரி கத்தியால் குத்திக்கொலை

பொம்மிடி அருகே பேன்சி வியாபாரி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக உறவினரான தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-07-11 15:42 GMT

பாப்பிரெட்டிப்பட்டி:

பொம்மிடி அருகே பேன்சி வியாபாரி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக உறவினரான தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பேன்சி வியாபாரி

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள விடிவெள்ளி நகரை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 34). பேன்சி வியாபாரி. இவர் இருசக்கர வாகனத்தில் பேன்சி பொருட்களை ஊர் ஊராக வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு சத்யா என்ற மனைவியும், திவ்யதர்ஷினி (13) என்ற மகளும், ஆகாஷ் (11) என்ற மகனும் உள்ளனர்.

விடிவெள்ளி நகரை சேர்ந்தவர் ஈஸ்வரன் (42). தொழிலாளி. இவர்கள் 2 பேரும் உறவினர்கள். கடந்த 4-ந்தேதி முனியப்பன் தனது மகள் திவ்யதர்ஷினிக்கு பொம்மிடியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் மஞ்சள் நீராட்டு விழா நடத்தினார். இந்த விழாவுக்கு ஈஸ்வரனை அழைக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், முனியப்பனுக்கு, ஒரு பெண்ணுடன் பழக்கம் இருந்ததாக தெரிகிறது.

குத்திக்கொலை

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு விடிவெள்ளி நகரில் கங்கை முத்து மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவை முனியப்பன் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஈஸ்வரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முனியப்பனின் வயிற்றில் சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த முனியப்பன் அங்கேயே ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த திருவிழாவை பார்த்து கொண்டு இருந்தவர்கள் அலறியடித்து ஓடினர்.

பின்னர் அக்கம் பக்கத்தினர் முனியப்பனை மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதித்த போது முனியப்பன் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து முனியப்பன் மனைவி சத்யா பொம்மிடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று முனியப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொழிலாளி கைது

இந்த கொலை குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்குப்பதிவு செய்து ஈஸ்வரனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் திருவிழாவில் வியாபாரி குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பொம்மிடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்