விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ-மாணவிகளுக்கு வழிகாட்டி நிகழ்ச்சி
தூத்துக்குடி மாவட்டத்தில் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ-மாணவிகளுக்கு வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது.
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் ஆகியவை சார்பில் விடுதிகளில் தங்கிப் பயிலும் 10-ஆம் வகுப்பு, 12-ம் வகுப்பு கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவ-மாணவிகளுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி தூத்துக்குடி வ.உ.சி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி உதவி கலெக்டர் கவுரவ்குமார் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசுகையில், அரசு விடுதிகளில் தங்கிப் பயிலும் 10-ம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு மற்றும் கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவ-மாணவிகள் தங்களுக்கான வாழ்க்கைப் பாதையை சரியாக தேர்வுசெய்து, வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டுமென்ற அடிப்படையில் இந்த வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. எனவே, மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்வித்தொகுப்பை முதலில் தேர்வுசெய்து, முழு விருப்பத்துடன் கல்வித்தகுதி, தனித்திறமை ஆகியவற்றை வளர்த்துக்கொண்டு வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்றார்.
தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள 34 அரசு விடுதிகளில் தங்கிப் பயிலும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான கலை திருவிழாவில், மாவட்ட அளவில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டி, கட்டுரைப்போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் விக்னேஸ்வரன், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மூத்த உதவி மருத்துவர் சூர்ய பிரதிபா, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநர் பேச்சியம்மாள், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சொர்ணலதா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சையது முகம்மது, காமராஜ் கல்லூரி முதல்வர் பூங்கொடி உள்பட அரசு அலுவலர்கள், அரசு விடுதி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.