மனநோயாளிகள் அடிப்படை உரிமையை இழந்து விடுகிறார்கள்-அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி வேதனை

மூட நம்பிக்கை அல்லது சட்ட விரோதமாக அடைத்து வைப்பதால் மனநோயாளிகள் மருத்துவம் மற்றும் அடிப்படை உரிமையை இழந்து விடுகிறார்கள் என்று அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மகாலெட்சுமி வேதனை தெரிவித்தார்.

Update: 2022-10-12 18:57 GMT

விழிப்புணர்வு முகாம்

உலக மன நல தினத்தையொட்டி அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவும் ஜெயங்கொண்டம் வட்ட சட்டப்பணிகள் குழுவும் இணைந்து ஆண்டிமடத்தில் இயங்கும் சிறப்பு பள்ளியில் மன நலம் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் குறித்தான சட்ட உதவி விழிப்புணர்வு முகாமை நடத்தியது. இதற்கு அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான மகாலெட்சுமி தலைமை தாங்கி பேசும்போது கூறியதாவது:-

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சமுதாயத்திலும் தனது குடும்பத்திலும் புறக்கணிக்கப்படும்போது அவர்களுக்கு சட்ட பாதுகாப்பு அளிப்பது மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் கடமையாகும். அவர்கள் மனநல காப்பகத்தில் இருந்தாலும் அல்லது மன சிகிச்சை மருத்துவத்தில் இருந்தாலும் சட்ட உதவி பெற தகுதியானவர்கள்.

அடிப்படை உரிமை...

மன நோயாளி மற்றும் மனரீதியான ஊனமுடையோர் இழுக்கானவர் அல்லர். அவர்களுக்கு தேவையான சட்ட ரீதியான அனைத்து உரிமைகளையும் பெற்றிடவே உதவி செய்திட எங்களின் நோக்கமாகும். மேலும், அவர்களின் அடிப்படை கவுரவம் மற்றும் சுயசார்பு சுதந்திரம் ஆகியவற்றை பெற்றிட வேண்டும். மன நோயாளிகளை மோசமான மூட நம்பிக்கையிலோ அல்லது சட்ட விரோதமாக அடைத்து வைப்பதாலோ தங்களின் மருத்துவம் மற்றும் அடிப்படை உரிமையை இழந்து விடுகிறார்கள்.

கடுமையான மனநோயாளிகளுக்கு தகுந்த சிகிச்சை மேற்கொள்ள அவர்கள் உறவினர்கள் மூலம் தகுந்த ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், பெண் மனநோயாளிகள் மோசமாக நடத்தப்படுவதிலிருந்து குறிப்பாக பாலியல் மோசடி போன்றவற்றிலிருந்து பாதுகாத்திடவும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு துணைபுரியும். அவ்வாறு மோசமான நபர்களின் மீது சட்ட ரீதியாக நடவடிக்கையும் எடுக்கப்படும்.

சொத்துக்களில் உரிமை

வீடற்ற மற்றும் நிர்கதியற்ற மனநோய் நோயாளிகள் இருப்பின் அது குறித்த தகவல்கள் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிற்கு தெரிவித்தால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திடம் கலந்து பேசி அவர்களுக்கு உதவி புரிந்திடும். மனநல பாதிப்பு மற்றும் மனநல குறைப்பாடு உள்ளவர்கள் தங்கள் அசையும் மற்றும் அசையா சொத்துக்களில் மற்றவர்களை போல் பங்கு பெறும் உரிமையும் உள்ளது. தொண்டு நிறுவனங்கள் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிடம் தொடர்பு கொண்டு மேற்படி குறைகளை தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

முகாமில், அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் மற்றும் மூத்த சிவில் நீதிபதி அழகேசன், ஜெயங்கொண்டம் வட்டசட்டப்பணிகள் குழு தலைவர் மற்றும் சார்பு நீதிபதி லதா, நீதித்துறை நடுவர் ராஜசேகரன், மாவட்ட உரிமையியல் நீதிபதி கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முடிவில் ஜெயங்கொண்டம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் இளநிலை நிர்வாக உதவியாளர் லெபர்ன் வசந்த ஹாசன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்