மாதவிடாய் காலங்களில் பெண்களை பொது இடத்தில் தனிமைப்படுத்தக்கூடாது-கலெக்டர் அறிவுரை
மாதவிடாய் காலங்களில் பெண்களை பொது இடத்தில் தனிமைப்படுத்தக்கூடாது என கலெக்டர் அறிவுரை வழங்கினார்.;
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள இனம் அகரம் கிராமத்தில் மாதவிடாய் காலங்களில் பெண்கள் பொது இடங்களில் தனிமைப்படுத்தப்படுவதாக கிடைத்த தகவலின் படி மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடப்பிரியா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அப்பகுதி பெண்களிடம் அவர் கூறுகையில், பெண்கள் மூட பழக்க வழக்கங்களை கைவிட்டு விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப சுகாதாரமாக வாழ கற்றுக் கொள்ள வேண்டும். குறிப்பாக இந்த பகுதி பெண்கள் மாதவிடாய் காலங்களில் பொது இடங்களில் தனிமைப்படுத்தப்படுவதாக தெரிகிறது. எனவே இது போன்ற பழக்கங்களை கைவிட்டு பெண்களை உங்கள் வீட்டிலேயே வைத்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மேலும் மாணவிகளுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளிலும், சுகாதார செவிலியர்கள் மூலமாகவும் இலவசமாக நாப்கின் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பெண்கள் பயன்படுத்தி சுகாதாரமாக வாழ வேண்டும் என அறிவுரை கூறினார். அப்போது சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் செந்தில்குமார், வட்டார மருத்துவ அலுவலர் பிரேம்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.