அச்சுறுத்தும் அரசு பள்ளி கட்டிடங்கள்

சேதமடைந்த அரசு பள்ளி கட்டிடங்களை சீரமைக்க வேண்டும்.;

Update: 2022-10-16 18:41 GMT

தமிழகத்தில் கடந்த 2004-ம் ஆண்டு கும்பகோணம் பள்ளியில் நடந்த தீவிபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர். இந்த தீவிபத்தை தொடர்ந்து தமிழக அரசு மாநிலம் முழுவதும் ஒவ்வொரு கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பு கோடை கால விடுமுறையின் போது கல்வித்துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை ஆகிய துறைகளின் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் பள்ளிக்கட்டிடங்களை ஆய்வு செய்து அதன் தகுதி மற்றும் உறுதித்தன்மை குறித்து சான்றளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

கொரோனா பாதிப்பு

இந்த நடைமுறை தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வந்த போதிலும் இடையில் கொரோனா பாதிப்பால் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் ஆய்வு நடத்தப்படவில்லை.

நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் பல கட்டங்களாக திறக்கப்பட்டு செயல்பட அரசு அனுமதித்துள்ள நிலையில் அரசு உத்தரவிட்டபடி பள்ளி கட்டிடங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனவா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

எனினும் மாவட்ட நிர்வாகம் ஆய்விற்கு பின் 137 சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள் இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது. ஆனாலும் எத்தனை பள்ளி கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன என்ற விவரம் தெரிவிக்கப்படாத நிலையே நீடிக்கிறது. விருதுநகரில் எஸ்.எஸ்.எஸ். அரசு மேல்நிலைப்பள்ளியில் இடிந்த சுற்றுச்சுவர் அகற்றப்படாமல் கிடக்கின்றது. விருதுநகர் அருகே ஆமத்தூரில் அரசு மேல்நிலைப்பள்ளியில் சேதமடைந்த கட்டிடம் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுப்படி முழுமையாக இடித்து அகற்றப்படாத நிலை நீடிக்கிறது. மலைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியிலும் சேதமடைந்த கட்டிடம் இடிக்கப்பட்ட நிலையில் இடிபாடுகள் அகற்றப்படாத நிலை நீடிக்கிறது. இதேபோன்று நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் சுற்றுச்சுவரும், ஆய்வகமும் சேதமடைந்த நிலையில் உள்ளன.

பாதிப்பு

கடந்த காலங்களில் விருதுநகர், சூலக்கரை, மல்லாங்கிணறு ஆகிய பகுதிகளில் இடிக்கப்பட்ட கட்டிடங்களின் இடிபாடுகள் அகற்றப்படாமல் இருந்ததால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிகழ்வுகள் நடந்தது உண்டு. இதேபோன்று பள்ளி நேரங்களில் கட்டுமான பணிகள் நடக்க அனுமதிக்கப்படுவதாலும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நகர் மத்தியில் ஒரு நடுநிலைப்பள்ளியிலும் இடிக்கப்பட்ட கட்டிடத்தின் இடிபாடுகள் அகற்றப்படாத நிலை இருந்தது. இம்மாதிரியான நடைமுறைகளால் மாணவ, மாணவியருக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.

அனைத்து பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு கழிவறை கட்டித்தர வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையிலும் 50 சதவீதத்திற்கும் மேலான பள்ளிகளில் கழிவறைகள் கட்டப்படாமலும், சேதமடைந்த நிலையிலும் உள்ளன.

எனவே மாவட்ட நிர்வாகம் கல்வித்துறை மூலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் சேதமடைந்த கட்டிடங்களின் விவரத்தினை கேட்டறிந்து அவற்றை இடித்து அகற்றவும், புதிய கட்டிடங்கள் கட்டவும் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் மாணவ, மாணவிகள் கல்வி கற்பதை விட அவர்களின் பாதுகாப்பு மிக முக்கியமானதாகும்.

கழிவறை வேண்டும்

சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள் குறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

செவலூரை சேர்ந்த மீனாட்சி சுந்தரம் கூறியதாவது:-மாவட்டத்தில் உள்ள கிராமப்பகுதிகளில் அரசு பள்ளி கட்டிடங்கள் பெரும்பாலானவை முறையாக பராமரிக்கப்படாத நிலையில் சேதமடைந்த நிலையில் உள்ளன. இவற்றை சீரமைக்க வேண்டியது உடனடி அவசியம் ஆகும். பள்ளி கல்வித்துறை மாவட்ட நிர்வாகத்துடன் கலந்தாய்வு செய்து சேதமடைந்த பள்ளி கட்டிடங்களை சீரமைக்கவும், கழிப்பறை இல்லாத பள்ளிகளில் கழிப்பறைகள் கட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

நகரங்களுக்கு செல்லும் மாணவர்கள்

சமூக ஆர்வலர் ஷேக் கூறியதாவது:-

சிவகாசி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இங்குள்ள பள்ளிகள் போதிய பராமரிப்பு இன்றி இருப்பதால் கிராமப்புற பள்ளிகளில் படிக்க மாணவர்கள் அச்சப்பட்டு சிவகாசியில் உள்ள பள்ளிகளில் படித்து வருகிறார்கள். கிராமப்புற பள்ளிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தால் மாணவ, மாணவிகள் சைக்கிள் மற்றும் பஸ்களில் நகரங்களுக்கு வந்து செல்ல வேண்டிய நிலை இருக்காது. பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை பராமரிக்க அரசு நிதி ஒதுக்கினாலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதனை செய்ய முன்வருவதில்லை என்று கூறப்படுகிறது. எனவே பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை கண்டறிந்து அவற்றை சரி செய்ய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மூடப்பட்ட பள்ளி கட்டிடம்

ஊத்துப்பட்டி செந்தில் முருகன் கூறுகையில், ஏழாயிரம் பண்ணை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கட்டப்பட்ட கூடுதல் கட்டிடம் முற்றிலும் சேதம் அடைந்ததால் கடந்த 2 வருடமாக மூடப்பட்டு கிடக்கிறது. இதனால் குறுகிய வகுப்பறையில் நெருக்கடியுடன் இருந்து கல்வி பயிலும் நிலை உள்ளது. கட்டிடம் பயன்படுத்தாமல் இருப்பதால் அக்கம் பக்கத்தினர் குப்பைகள் கொட்டும் இடமாக பள்ளி வளாகத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இடிக்க வேண்டும்

சூரனூரை சேர்ந்த கந்தசாமி கூறியதாவது:-

காரியாபட்டி தாலுகா சூரனூர் கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பள்ளி கட்டிடத்தில் தொடக்க பள்ளிக்கூடம் இயங்கி வந்தது. தற்போது இந்த பள்ளி நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டதால் வேறொரு இடத்தில் புதிய பள்ளிக்கூடம் கட்டப்பட்டு அங்கு இயங்கி வருகிறது. ஏற்கனவே இயங்கி வந்த பள்ளிக்கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த பள்ளி கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும்.

சேதமடைந்த சுற்றுச்சுவர்

சுந்தரராஜபுரத்தை சேர்ந்த ராசைய்யா கூறியதாவது:- சுந்தரராஜபுரம் அரசு ஆதி திராவிடர் மேல்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுவர் மிகவும் சேதமடைந்த நிலையில் பாதுகாப்பற்று காணப்படுகிறது. பழைய கட்டிடங்களை கொண்ட பள்ளிகளில் படிக்கக்கூடிய குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாய் இருக்கின்றது. குறிப்பாக மழைக்காலங்களில் கட்டிடங்களின் தரம் மேலும் குறைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே அனைத்து பள்ளி கட்டிடங்களையும் ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும்.

திருச்சுழி அருகே காளையார் கரிசல்குளத்தை சேர்ந்த சமூகஆர்வலர் ஜோயல் கூறியதாவது:- மறவர்பெருங்குடி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயில்கின்றனர். இந்தநிலையில் மழையால் பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதனை இன்னும் சீரமைக்கப்படவில்லை. எனவே பள்ளி மாணவ, மாணவிகளின் நலன் கருதி சுற்றுச்சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒத்தப்பட்டி முனீஸ்வரன்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் ரோட்டில் ஒத்தப்பட்டி நரேங்குளம் உள்ளது. இங்குள்ள அரசு பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்த நிலையில் உள்ளது. ஆதலால் அதிகாரிகள் உடனே பார்வையிட்டு சேதமடைந்த கட்டிடங்களை சீரமைக்க வேண்டும்.


Tags:    

மேலும் செய்திகள்