"சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியை பாதி பாதியாகத்தான் தருகிறார்கள்": கடம்பூர் ராஜூ

“சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியை பாதி பாதியாகத்தான் தருகிறார்கள்” என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. புகார் தெரிவித்துள்ளார்.;

Update: 2022-10-14 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசு விழாக்களுக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை அழைக்க கூடாது என்று தி.மு.க. அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்ததாக கூறுகின்றனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து சட்டசபையில் கேள்வி எழுப்பப்படும். மக்களுக்கு வழங்கப்படும் திட்டங்களில் அரசியல் காழ்ப்புணர்ச்சி இருக்க கூடாது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து கட்சிகளும் தனித்து நின்றால், அ.தி.மு.க.வும் தனித்து நிற்க தயார். ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனித்து நின்று 37 இடங்களை வென்றுள்ளது.

தி.மு.க. அரசின் குறைபாடுகளை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சுட்டிக்காட்டுகிறார். இது ஆரோக்கியமான விஷயம்தான். ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டும் பொறுப்பு எங்களுக்கு இருப்பது போன்று, பா.ஜ.க.வுக்கும் இருக்கிறது. மக்களின் பிரச்சினைகள் குறித்து நாங்கள் சட்டமன்றத்தில் எடுத்துரைப்போம். அப்போது எதிர்க்கட்சி யார்? என்பது தெரியும். ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவோம்.

அ.தி.மு.க. அரசின் பல்வேறு நலத்திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்தி உள்ளது. நிதி வருவாயை உயர்த்துவதற்கான எந்த அடிப்படை கட்டமைப்பையும் தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியைக்கூட முழுமையாக தராமல் பாதி பாதியாக தரக்கூடிய சூழ்நிலைதான் உள்ளது.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த திரைப்படங்களுக்குதான் தற்போது விருது வழங்கி உள்ளனர். அ.தி.மு.க.வில் எவ்வித பிரிவும் இல்லை. ஒரு சிலர்தான் பிரிந்து சென்றுள்ளனர். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் பிரச்சினை தொடர்பாக, சபாநாயகர் எடுக்கும் முடிவை தொடர்ந்து அ.தி.மு.க. நடவடிக்கை இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்