பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிதல் தொடர்பான கூட்டம்

பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிதல் தொடர்பான கூட்டம்

Update: 2023-05-18 18:45 GMT

நாகை மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிதல் தொடர்பான கூட்டம் நாளை(சனிக்கிழமை) நடக்கிறது.

இதுகுறித்து நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பள்ளியில் சேர்க்கும் பணி

நாகை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்க்கும் பணி நடைபெற உள்ளது. அதன்படி மாவட்டத்தில் உள்ள 193 கிராம ஊராட்சிகளில் நாளை(சனிக்கிழமை) காலை 11 மணி அளவில் பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறிதல் தொடர்பான கூட்டம் ஊராட்சி மன்றத்தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது.

இடைநின்ற குழந்தைகள், மாற்றுத்திறனுடைய குழந்தைகள் மற்றும் இடம் பெயர்ந்து வரும் தொழிலாளர்களின் குழந்தைகளில் இடைநிற்றலுக்கு வாய்ப்புள்ள குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் பள்ளிக்கு வரவழைத்திட கிராம ஊராட்சிகளில் உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்த கூட்டம் நடத்தப்பட உள்ளது.

பள்ளி செல்லா குழந்தைகளின் பட்டியல்

கூட்டத்தில் கிராம அளவிலான குழந்தை பாதுகாப்பு குழு உறுப்பினர்கள், ஊராட்சி நிலையில் உள்ள பிறதுறை அலுவலர்களான ஊரக வளர்ச்சி துறை, கல்வித்துறை, சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்துறை, வருவாய்த்துறை, பொது சுகாதார துறை, சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி நலத்துறை போன்ற துறைகளின் உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து வகுப்பு வாரியாக பள்ளி செல்லா குழந்தைகளின் பட்டியலை தயார் செய்து அதன் அடிப்படையில் மாணவர்களை அரசு பள்ளிகளில் மீண்டும் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்