தர்மபுரி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்: அனைத்து கட்சி கவுன்சிலர்கள் வெளிநடப்பு

Update: 2023-05-26 18:45 GMT

தர்மபுரி:

தர்மபுரி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தர்மபுரியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் நீலாபுரம் செல்வம் தலைமை தாங்கினார். இதில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட அனைத்து கட்சி ஒன்றிய கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசுகையில், கடந்த 3 ஆண்டுகளாக கவுன்சிலராக உள்ளோம். நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியில் குடிநீர், சாலை, சுகாதார வளாகம், சிறுபாலம், அரசு வீடு என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மற்றும் பிரச்சனைகளுக்கு மக்கள் எங்களை அனுகுகின்றனர்.

எங்களுக்கு போதிய நிதி ஒன்றியத்தின் மூலம் ஒதுக்காததால் மக்களின் கோரிக்கையைநிறைவேற்ற முடியவில்லை. ஊராட்சி ஒன்றிய நிர்வாகமும் எங்களுக்கு போதிய நிதி ஒதுக்க முன்வரவில்லை. எனவே நாங்கள் அனைவரும் கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்கிறோம் என்று கூட்டத்தை விட்டு வெளியேறினர். இதனால் கூட்டத்தில் திடீரென பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஒரு மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு ஒன்றிய குழு தலைவர் கவுன்சிலர்களை சமாதானப்படுத்தி கூட்டத்துக்கு அழைத்து சென்றார்.

இருந்தபோதிலும் கவுன்சிலர்கள் மீண்டும் வெளிநடப்பு செய்தனர்.

மேலும் செய்திகள்